வியாழன், 27 ஏப்ரல், 2017

மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கிட மீன்வளத்துறைக்கு உத்தரவு! April 27, 2017




சென்னை அருகே நடுகடலில் இரு கப்பல்கள் மோதி கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில், அப்பகுதி மீனவர்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கிட மீன்வளத்துறைக்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே, கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி  இரு சரக்கு கப்பல்கள் மோதி விபத்திற்குள்ளானது. இதனையடுத்து கப்பலில் இருந்து கொட்டிய எண்ணெயினால் கடல் வளம், மீன் மற்றும் கடலில் உள்ள பல்வேறு நுண்ணுயிரினங்கள் அழிந்தது.

இது தொடர்பாக இராயபுரம் மீனவர் சங்க நிர்வாகி கே.ஆர்.செல்வராஜ்குமார் மற்றும் வழக்கறிஞர் சரவண தட்சிணாமூர்த்தி ஆகியோர் தென்மண்டல தேசிய பசுமைத்தீர்ப்பாயத்தில் தனித்தனி மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணை நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் அமர்வு முன்பு வந்தது.

கடலில் எண்ணெய் கலந்த விவகாரத்தில் இழப்பீட்டை கணக்கிட மீன்வளத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இப்பிரச்சனை குறித்து ஒரு கூட்டத்தை கூட்டி பாதிக்கப்பட்டவர்களை அழைத்து இழப்பீட்டை கணக்கிடவும், மறுசீரமைப்பு பணிகள் குறித்து உரிய ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு பசுமைத்தீர்ப்பாயம் உத்தரவிட்ட நீதிபதிகள். இந்த வழக்கை ஜுலை 6 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.