பெரும் நிறுவனங்களின் ஊழல் அரசியல் கட்சிகளின் லஞ்சம் எனக் கோடிகளில் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், அன்றாட வாழ்க்கையில் குட்டிக் குட்டி லஞ்சத்துக்கும் குறைவில்லை.
அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வாங்குவது, ஓட்டுநர் உரிமம் வாங்குவது போன்ற பல்வேறு பொது சேவைகளில் பெறப்படும் சின்னச் சின்ன லஞ்சம் பற்றி ஆய்வு ஒன்றை சமர்ப்பித்துள்ளது இந்திய ஊழல் ஆய்வு மையம்.
இந்தியாவில் பொது சேவைகளுக்காக சின்ன சின்னதாக லஞ்சம் பெறும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடம் வகிப்பதாக இந்திய ஊழல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய ஊழல் ஆய்வு மையத்தின் அறிக்கையில், “இந்தியாவில், 10 பொதுத்துறை ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சின்ன சின்ன லஞ்சத்தில், 20 மாநிலங்களில் அளிக்கப்பட்ட லஞ்சத் தொகையின் மதிப்பு 6,350 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2005-இல் 20,500 கோடியாக இருந்தது. அந்தக் கணக்கை வைத்துப் பார்க்கும் போது இப்போது குறைந்துள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், 20 மாநிலங்களில் 3000 குடியிருப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2005க்கும், 2017-க்கும் லஞ்சம் குறைந்துள்ளது என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
10, 20 ரூபாய் முதல் 500, 1000 வரை அளிக்கப்படும் லஞ்சத்தைக் கணக்கிட்டால் கர்நாடகாவுக்குத்தான் முதலிடம். இரண்டாவது இடத்தில் ஆந்திராவும் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடும் இருக்கின்றன. மிகக்குறைந்த அளவில் லஞ்சம் பெறப்படும் மாநிலங்களாக சத்தீஸ்கர், கேரளா, மற்றும் ஹிமாசல பிரதேசம் மாநிலங்கள் இருக்கின்றன எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : April 28, 2017 - 05:15 PM