உ.பி. மாநிலம் முழுவதும் பரவலாக பெட்ரோல் பங்க்களில் வாடிக்கையாளர்களிடம் பெட்ரோல் திருடப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிறப்பு இலக்கு படையினர் லக்னோவில் உள்ள பெட்ரோல் பங்க்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 8 பங்க்களின் உரிமையாளர்கள் மின்னணு சிப் உதவியுடன் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிப் பெட்ரோல் போடும் எந்திரத்தில் பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்திரத்தில் சரியான அளவு பெட்ரோல் போடப்பட்டதாக காட்டுகிறது.
ஆனால், உண்மையான அளவு குறைவாக இருப்பது கண்டுபிடி க்கப்பட்டது. உதாரணமாக ஒரு வாடிக்கையாளர் 5 லிட்டர் பெட்ரோல் போட்டால் அரை லிட்டர் குறைவாக உள்ளது. ஆனால் எந்திரத்தில் 5 லிட்டர் போடப்பட்டதாக காட்டுகிறது. இது அந்த மின்னணு சிப் மூலம் சாத்தியமாகிறது.
இந்த சிப்பில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் அளவு நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு லிட்டருக்கு 60 மிலி பெட்ரோல் திருடப்படுகிறது. இத்தகைய பெட்ரோல் திருட்டு மூலம் மாதந்தோறும் ரூ. 14 லட்சத்தை உரிமையாளர்கள் சம்பாதிக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
லக்னோவை சேர்ந்த ரவீந்தர் என்ற எலக்ட்ரிஷியன் இந்த சிப்பை 3 ஆயிரம் ரூபாய்க்கு தயாரித்து வழங்குகிறார். இதன் மூலம் 6 சதவீத எரிபொருள் எந்திரத்தில் இருந்து வெளியேறுவது தடுக்கப்படுகிறது. இந்த சிப் ஒயர் மூலம் ரிமோட் கன்ட்ரோலோடு இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சிப்பை ஆயிரம் பங்க்களுக்கு ரவீந்தர் விற்பனை செய்துள்ளார்.லக்னோ மாநகரில் மட்டும் 8 பங்க்களில் சோதனை நடத்தப்பட்டது. அனைரும் இந்த சிப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்