முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகுதான், வருமான வரித்துறையின் சோதனைகள் வேகமெடுத்தன.
அந்த நேரத்தில் ஐதராபாத்தில் இருந்து ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் குழு ஒன்று சென்னைக்கு வந்ததாக செய்தி வெளியானது.
அந்த அதிகாரிகளுக்கு எந்தப் பணிகளும் வழங்கப்படவில்லை. சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள்.
அவர்களுக்கான உணவு, தங்கும் இடத்துக்கான செலவுகளே லட்சங்களைத் தாண்டியது. நகை, நிலம், தொழில்கள் என ஒவ்வொரு பிரிவிலும் அந்த அதிகாரிகள் நிபுணத்துவம் பெற்றவர்கள்.
அவர்களை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருப்பதும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வருமான வரித்துறை, புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் ஜெனரலும் நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனிலேயே தொடர்ந்து மீட்டிங் நடத்தி வந்தார்.
மீட்டிங் குறித்த தகவல்களை எல்லாம் மிக ரகசியமாக பாதுகாத்துக் கொண்டார்கள். 100 நாட்களுக்குப் பிறகு வகையாகச் சிக்கியிருக்கிறார் விஜயபாஸ்கர்.
அவரது உதவியாளர் சரவணன் நடத்திய அத்தனை முறைகேடுகளையும் வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறோம்” என்கிறார் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர்.
இந்த நிலையில் இந்த ரெய்டு ஏதோ ஆளும்கட்சியை மட்டுமே குறிவைத்து நடத்தப்படுவதைப் போன்ற தோற்றம் காண்பிக்கப்படுகிறது.
அது மிகவும் தவறானது. நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த ரெய்டு நடக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின் நாட்டை சுத்தப்படுத்தும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.
அந்தப் பணியின் ஓர் அங்கம்தான் இந்தச் சோதனைகள்” என விவரித்தார் பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்.