உத்திரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி அரசு மருத்துவனையில் இந்த வருடத்தில் இதுவரை சுமார் 1317 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.
இந்த அதிர்ச்சிகரமான தகவலை மருத்துவமனை புள்ளிவிவரங்கள் உறுதிசெய்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாத இறுதிவாரத்தில் 48 மணிநேரத்தில் 42 குழந்தைகள் இறந்துபோயினர். ஆகஸ்ட் மாத முதல்வார இறுதியில் மட்டும் சுமார் 70 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த செய்திகளால் நாடே அதிர்ச்சியில் உறைந்தது.
மருத்துவமனை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டும், இந்த வருடம் ஜனவரியில் 152, பிப்ரவரியில் 122, மார்ச்சில் 159, ஏப்ரலில் 123, மே மாதம் 139, ஜூன் 137, ஜூலை 128, ஆகஸ்ட் மாதம் 327 குழந்தைகள் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி தொடங்கி வார இறுதிவரை சுமார் 70 குழந்தைகள் இறந்தபோன போது, குழந்தைகளுக்கு சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததன் காரணமாகவே குழந்தைகள் இறந்து போயினர். அரசு சார்பாக ஆக்ஸிஜன் சப்ளைக்கு கொடுக்கப்பட வேண்டிய கட்டணத்தொகை கொடுக்கப்படாததாலேயே ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது என்று சொல்லப்பட்டது.
குழந்தைகளுக்கான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்ய கடைசி நேரத்தில் தனது சொந்த பணத்தை செலவு செய்து மூளை அழற்சி பிரிவின் பொறுப்பு மருத்துவராக செயல்பட்ட மருத்துவர் கபீல் கான் முயற்சி செய்துள்ளார். ஆனால், கடுமையான முயற்சிகளுக்கு பிறகாகவும் குழந்தைகள் இறந்துபோயின.
இந்நிலையில், உத்திரப்பிரதேச அரசு மூளை அழற்சி பிரிவின் பொறுப்பு மருத்துவராக செயல்பட்ட கபீல்கானை அரசு பதவியிலிருந்து இடைநீக்கம் செய்தது. அதனையடுத்து, அவர் தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று இரவு சிறப்பு படை போலீசார் கைது செய்தனர். கபீல் கான் தன் சொந்த செலவில் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசு விசாரணைக் குழு அமைத்திருந்தது. அக்குழு சமீபத்தில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அவரது மனைவி டாக்டர் பூர்ணிமா சுக்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். மேலும், டாக்டர் கபீல் கான் மீதும் அதே அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கபீல் கான் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்.