புதன், 27 செப்டம்பர், 2017

​ஜெயலலிதா சிகிச்சையின் போது அனைத்து முடிவுகளையும் எடுத்தது அதிகாரிகளே: டி.டி.வி. தினகரன் September 27, 2017

​ஜெயலலிதா சிகிச்சையின் போது அனைத்து முடிவுகளையும் எடுத்தது அதிகாரிகளே: டி.டி.வி. தினகரன்


ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான அனைத்து முடிவுகளையும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளே எடுத்ததாக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். 

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில், பங்கெடுத்த அவர் இதனைத் தெரிவித்தார். 

ஜெயலலிதாவுக்கு துரோகம்:

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது, அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வி.கே. சசிகலா எடுத்த வீடியோ தங்களிடம் உள்ளதாகவும், அதனை பொதுவெளியில் வெளியிட்டால் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்ததாக அமையும் என்றும் தினகரன் கூறியுள்ளார். 

உயர் அதிகாரிகளே முடிவு:

ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, அவரை சந்திக்க வி.கே. சசிகலா தரப்பினர் யாரையும் அனுமதிக்கவில்லை என கூறப்படுவதையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார். தங்களைக் காப்பாற்றி கொள்ளவே அமைச்சர்கள் இவ்வாறு பொய் பிரசாரம் செய்வதாகக் கூறிய தினகரன், ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை தொடர்பான முடிவுகளை தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளே எடுத்ததாகவும் தெரிவித்தார். 

துரோகத்தின் அடையாளம் ஓ.பி.எஸ்:

நேர்காணலின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் துரோகத்தின் அடையாளம் என விமர்சித்தார். 

ஆட்சி கவிழும்:

இந்த ஆட்சி போக வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலைகளில் தான் இறங்கிவிட்டதாகக் கூறிய டி.டி.வி தினகரன், நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடந்தாலும் இந்த ஆட்சி கவிழும் என தெரிவித்தார். 

சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ-க்கள் மட்டுமின்றி, மேலும் 3 எம்எல்ஏ-க்கள் தங்கள் பக்கம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய தினகரன், இந்த எண்ணிக்கை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கூடும் என குறிப்பிட்டார்.