தினமும் நாளிதழில்களில் ராசிக்குறிப்புகள் வருவதைப் போல போலி சாமியார்கள் பெண்களுக்கு எதிராக செய்யும் பலாத்கார குற்றங்கள் வெளியாகி வருகின்றன. சமீப நாட்களில் மிக அதிகமாக அதிகரித்திருக்கும் இந்த குற்றங்கள் ஆன்மீகத்தையும், பெண்கள் குறித்த சமூக மனநிலையையும் இழிவாக்குகிறது.
ஹரியான குர்மீத், குஜராத் ஆஷ்ரம் பாபு போன்ற பலாத்கார சாமியார்களின் வரிசையில் இன்று உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் ஆசிரமத்தில் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சீதாப்பூரில் உள்ள ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்த பெண், அங்குள்ள சாமியார் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன்னைக் கடத்தி வந்த ஒருவர் ஐம்பதாயிரம் ரூபாய்க்குச் சாமியாரிடம் விற்றுவிட்டதாகவும், அன்றில் இருந்து நாள்தோறும் சாமியார் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாகவும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சாமியார் என்கிற போலி அடையாளத்தில் வன்புணர்வு குற்றம் நிகழ்த்தும் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.