புதன், 20 செப்டம்பர், 2017

​2ஜி வழக்கில் அக்டோபர் 25ஆம் தேதி தீர்ப்பு: சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு! September 20, 2017

​2ஜி வழக்கில் அக்டோபர் 25ஆம் தேதி தீர்ப்பு: சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு!


நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய, 2ஜி வழக்கில் அக்டோபர் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார். 

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுக-வைச் சேர்ந்த ஆ.ராசா, தொலை தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 

அப்போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது. 

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., தொடர்ந்த இரு வழக்குகளையும், அமலாக்கத் துறை தொடர்ந்த ஒரு வழக்கையும் டெல்லி பாட்டியாலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. 

இந்த வழக்கில், ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு, பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 

இந்த வழக்கில் குற்றம்சாட்டவர்களுக்கு எதிராக, 2011ல், சி.பி.ஐ., முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அக்டோபர் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார்.