பசு பாதுகாவலர்கள் நடத்தும் வன்முறைகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசு பாதுகாவலர்களின் வன்முறையை தடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, பசு பாதுகாவலர்களால் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு மாநிலங்கள் உரிய நஷ்டயீடு வழங்க வேண்டும் எனவும் வரும் 31-ம் தேதிக்குள் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக பல்வேறு இடங்களில் கொலை உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றை தடுத்து நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது பசு பாதுகாவலர்கள் நடத்தும் வன்முறைகளை தடுக்கும் கடமை மாநில அரசுகளுக்கு உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதும், மாநில அரசுகளின் பொறுப்பு என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.