சனி, 30 செப்டம்பர், 2017

யார் இந்த பன்வாரிலால் புரோஹித்? September 30, 2017

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவரான பன்வாரிலால் புரோஹித், நாக்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து 3 முறை மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் காங்கிரஸ் கட்சியில் இருந்து இரு முறையும், பாஜகவில் இருந்து ஒரு முறையும் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி அஸ்ஸாம் மாநில ஆளுநரான நியமிக்கப்பட்ட இவர், பின்னர் கூடுதலாக மேகாலயா ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்நிலையில், அவர் தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் குறித்த முக்கியத் தகவல்கள். 
 
மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித், 1940ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்தார். இவருக்கு வயது 77. அகில இந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய பன்சாரிலால் புரோஹித், அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் 1978ம் ஆண்டு நாக்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

1980ம் ஆண்டு நாக்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பன்வாரிலால் புரோஹித், மகாராஷ்ட்ரா மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். 1984 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாக்பூரில் இருந்து  மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட இவர்,  அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான இயக்கத்தை பாஜக தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்தார்.

இதனையடுத்து, 1991ம் ஆண்டு பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், 1996ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பன்வாரிலால் புரோஹித் மீண்டும் வெற்றி பெற்றார். மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பாஜக முகமாக அறியப்பட்ட பிரமோத் மகாஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து 1999ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகிய பன்வாரிலால் புரோஹித், மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனையடுத்து 2003ம் ஆண்டு விதர்பா ராஜ்ய கட்சி எனும் கட்சியைத் தோற்றுவித்த புரோஹித், பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்து, 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டு தோல்வியுற்றார்.

இந்நிலையில், 2016ம் ஆண்டு அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், மேகாலயா ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார். 1911ம் ஆண்டு கோபால கிருஷ்ண கோகலே தொடங்கிய The Hitavada என்ற நாளிதழின் தற்போதைய உரிமையாளரான பன்வாரிலால், அந்த பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.