வியாழன், 28 செப்டம்பர், 2017

தமிழகத்தில் தொடரும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள் September 28, 2017

தமிழகத்தில் தொடரும் டெங்கு காய்ச்சல் உயிரிழப்புகள்


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், காய்ச்சல் காரணமாக, இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். மூன்று தினங்களுக்கு முன்பு, நவாஸ் என்பவர் காய்ச்சலால் உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரும் டெங்குவுக்கு பலியானார். எனினும், நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில், இதுவரை எந்த சுகாதார நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதனிடையே, மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். மதுரை செல்லூரில் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நான்கரை வயது சிறுமி ஐன்ஜீனா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இதேபோன்று, ஒத்தக்கடை பகுதியில் டெங்கு பாதிப்பு காரணமாக, ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 6 வயது சிறுமி திருச்செல்வியும் இன்று காலை பலியானார். இதுதவிர, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனும், சிறுமியும் டெங்குக் காய்ச்சல் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

திருவாரூர் அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக பெண் மென்பொறியாளர் உயிரிழந்துள்ளார்.  நடுகந்தன்குடி கிராமத்தை சேர்ந்த மோனிஷா என்ற இளம்பெண் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதால் விடுப்பு எடுத்துக் கொண்டு சிகிச்சைக்காக சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடமாடும் மருத்துவ குழுக்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு மட்டுமே பிரத்யேகமாக புறநோயாளிகள் பிரிவு செயல்பட உள்ளதாக கூறினார்.