ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

அனிதாவின் மரணத்திற்கு நீதிகோரி குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்..! September 03, 2017

அனிதாவின் மரணத்திற்கு நீதிகோரி குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்..!


நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதாவின் தியாகத்திற்கு நீதி கோரியும் உலகமெங்கிலும் உள்ள தமிழர்கள் போராட்டத்தி ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், 12ம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற அரியலூர் மாணவி அனிதா, மாநில பாடத்திற்கு அதிகம் தொடர்பில்லாத நீட் தேர்வில் தோல்வியுற்றார். இறுதிவரை மத்திய-மாநில அரசுகள் நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பத்தை விதைத்த நிலையில், தனது மருத்துவக் கனவு தகர்ந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அப்பிஞ்சு உள்ளம் தற்கொலை செய்துக் கொண்டார்.

அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறையினர், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அனிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருவதுடன், நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவந்து கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவதே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைக் கொண்டுவரும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


கனவுகளுடன் சிறகடித்து பறந்த அனிதா உடல் தகனம் செய்யப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.


ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் உயிர் தியாகம் செய்த அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். நீட் தேர்வு தடை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர்கள், மாணவியின் மரணத்திற்கு எதிராக தமிழகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர். இதேபோல், உலகின் பல்வேறு இடங்களில் வசிக்கும் தமிழர்கள் அனிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

Related Posts: