செவ்வாய், 3 அக்டோபர், 2017

கொசுக்களை கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு! October 03, 2017

கொசுக்களை கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு!


கொசுக்களை கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் உயிரிழந்துள்ளனர், குறிப்பாக குழந்தைகள், மற்றும் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்கி நிற்கும் நீராலும் சாக்கடை நீராலும் உருவாகும் கொசுக்களே டெங்கு காய்ச்சலுக்கு முக்கியமான காரணமாக உள்ளது. எனவே கொசுக்களை கட்டுப்படுத்தவும் மக்களை நோயிலிருந்து காப்பாற்றவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதற்காக நடமாடும் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யும் திட்டத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இந்த  திட்டத்தின் மூலம் 35 வாகனங்களில் மருத்துவர்கள் சென்று மக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்வர் என தெரிவித்தார். 

சென்னையில் நாள் ஒன்றுக்கு 50ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஆண்டுக்கு 10 ஆயிரம் நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு பூரண குணம் அடைந்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் கொசுக்களை கட்டுப்படுத்த 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.