செவ்வாய், 31 அக்டோபர், 2017

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! October 31, 2017

Image

வடகிழக்கு பருமழை காரணமாகவும் இலங்கையையொட்டி வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. 

சென்னையில்  நேற்று காலை முதலே பெய்யத் தொடங்கிய மழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்நிலையில் இரவிலும் நீடித்த கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் அதிக அளவு தேங்கி வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். மழை காரணமாக நேற்று மாலை கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. 

கனமழை எதிரொலியாக தமிழகத்தில் 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, விழுப்புரம், திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், பன்ருட்டி, காட்டுமன்னார்குடி, குமராட்சி உள்ளிட்ட 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். 

பருவமழை எதிரொலியாக சென்னையில் குடைகள் மற்றும் ரெயின் கோட்டுக்களின் விற்பனையும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை பூக்கடை பகுதியில் உள்ள  குடை விற்பனை கடைகளில் நேற்று மக்கள் விதவிதமான குடைகளையும் தங்கள் உடலுக்கு ஏற்ற ரெயின் கோட்களையும் வாங்குவதில் அதிக மும்முரம் காட்டினர். அதிக மழை மற்றும் காற்றை சமாளித்து காற்றுக்கு ஏற்ப தன் வடிவமைப்பை மாற்றி கொள்ளும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள  ரிவர்சபிள் குடைகள் பொதுமக்களின் கவனத்தை அதிக அளவு கவர்ந்தன.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், 300 தாழ்வான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் தண்ணீரில் சிக்கிக் கொண்டால், அவர்களை உடனடியாக மீட்க 109 படகுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உணவுப் பொருட்களும் தயார் நிலையில் உள்ளதாக கார்த்திகேயன் கூறினார்.

சென்னை மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.  திருவொற்றியூர்,  எண்ணூர்,    புதுவண்ணாரப்பேட்டை,  வண்ணாரப்பேட்டை,  காசிமேடு  ஆகிய  பகுதிகளில்  பலத்த மழை பெய்தது.  இதனால்  சாலையில்  பெருக்கெடுத்து ஓடிய மழை  நீரினால்  வாகன ஓட்டிகள்  சிரமம்  அடைந்தனர். சென்னை மெட்ரோ ரயில் வேலை பணிகளால் குறுகலாகவும்,  குண்டும் குழியுமாகவும் இருந்த சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது. 

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும்,  சம்பா சாகுபடியை தொடங்கி உள்ள விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில்  தஞ்சாவூர், ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை,  திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி  உள்ளிட்ட இடங்களில் நேற்று  கனமழை பெய்தது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கடந்த இரு தினங்களாக இரவில் மழை விட்டுவிட்டு பெய்துவரும் நிலையில் நீர் நிலைகள் நிரம்ப தொடங்கி உள்ளன. வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளான தெள்ளாறு, கண்டையநல்லூர், நடுக்குப்பம் ஆகிய கிராமங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருவது பயிர் செழிக்க உதவுமென  விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 

கனமழை எதிரொலியாக நாகை மாவட்டம் பெருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார். சீர்காழி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வயலில் குடை பிடித்தபடி வேலை பார்த்துக்கொண்டிருந்த ராமச்சந்திரன் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி பலியானார்.    

திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. முறையாக பராமரிக்கப்படாமல் இருந்த சாக்கடையில் மழைநீர் புகுந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அதனை மிதித்தபடியே செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. வாகன நெரிசலும் கடுமையாக காணப்பட்டது.