வெள்ளி, 27 அக்டோபர், 2017

வனத்துறை ஊழியரை அடித்து உதைத்த கிராம மக்கள்..! October 27, 2017

வனத்துறை ஊழியரை அடித்து உதைத்த கிராம மக்கள்..!


திருவண்ணாமலை அருகே வனத்துறை ஊழியரை பொதுமக்கள்  சராமரியாக அடித்து உதைத்த சம்பவம், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி திருமலை என்பவர்,  மாட்டுவண்டியில் மணல் எடுத்து விற்று வந்துள்ளார். இந்நிலையில், காட்டுப்பகுதியில் அவரை வனத்துறையினர் தாக்கியதாகவும், இதில் அவர், உயிரிழந்ததாகவும்  உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த செங்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த வனவர் தாண்டவராயன், சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அவரை சிறைபிடித்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், அவரை சராமரியாக தாக்கியுள்ளனர். 

மேலும் அவர் வந்த இருசக்கர வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தினர். இதனிடையே, படுகாயமுற்ற வனவர் தாண்டவராயனை போலீசார் மீட்டு, செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொழிலாளியின் உயிரிழப்பிற்கு காரணமான வனவர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென கல்வீச்சில் ஈடுபட்டதால், போலீஸார் தடியடி நடத்தினர். இதனால், மேல்புழுதியூர் கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.