திங்கள், 23 அக்டோபர், 2017

கீழடியில் அகழாய்வுப் பணிகளை தமிழக அரசே மேற்கொள்ள திட்டம்! October 23, 2017

கீழடியில் அகழாய்வுப் பணிகளை தமிழக அரசே மேற்கொள்ள திட்டம்!


சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒன்றரை மாதத்திற்குள் 4-ம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக அரசே தொடங்கும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை தரமணியில் உள்ள உலகத்தமிழர் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட பாண்டியராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கீழடியில் ஏற்கனவே 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்த நிலையில், அவற்றை காட்சிப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2 ஆண்டுகள் நடைபெற்ற அகழாய்வில் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தும் ஏராளமான பொருட்கள் வெளிப்பட்டன. சங்க காலத்தில் நகரங்கள் இருந்ததற்கான தடயங்கள் தென்பட்ட நிலையில், அகழாய்வு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாமுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

அமர்நாத் ராமகிருஷ்ணனனை அடுத்து ஸ்ரீராமன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. 3ம் கட்ட அகழ்வாய்வில் கட்டடங்கள் தொடர்ச்சி ஏதுமில்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு மேற்கொள்ளப்படுகிறது.