சனி, 28 அக்டோபர், 2017

சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பு! October 28, 2017

சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் அரசு மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பு!


சென்னையில், அரசு மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பே சுகாதாரமற்ற நிலையில் உள்ளது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கோஷா அரசு மகப்பேறு மருத்துவமனை ஊழியர்களின் குடியிருப்பே மிக மோசமான நிலையில் பராமரிப்பின்றி கொசு உற்பத்தி கிடங்காக காட்சியளிக்கிறது. நுழைவாயிலிலேயே தண்ணீர் தேங்கியும், குப்பைகள் அள்ளாமலும் காணப்படுகிறது. ஆளில்லாத சில வீடுகளின் முகப்புகளிலும், உட்புறங்களும் அதிக குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. 
 
மேலும் குடியிருப்பு வளாகத்தின் பின்புறம் கழிவுநீரும், பிளாஸ்டிக் குப்பைகளும் சில மாதங்களாகவே அள்ளப்படாமல் உள்ளன. மின் மோட்டார் அறை பின்பக்க வீடுகள் என எங்கும் அசுத்தமான நிலையே காணப்படுகிறது. 

இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். குடியிருப்பில் தங்கியிருப்பவர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என்பதால் பேட்டியளிக்க தயக்கம் காட்டுகின்றனர். மருத்துவமனை நிர்வாகமும், மாநகராட்சியும் இதனை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே 
இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்களின் நிலையே சுகாதாரமற்ற முறையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.