வியாழன், 26 அக்டோபர், 2017

24 மணி நேரத்தில் மழை: 24 மணி நேரம் செயல்படும் கட்டுபாட்டு அறை October 26, 2017

24 மணி நேரத்தில் மழை: 24 மணி நேரம் செயல்படும் கட்டுபாட்டு அறை


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சூழல் சாதகமாக இருப்பதாக தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை குன்னூரில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்துள்ளதாகவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

மேலும், மதுரையில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. பழங்காநத்தம், பொன்மேனி பகுதிகளிலும், அண்ணா நகர், கே.கே.நகர் ஆகிய இடங்களிலும் சுமார் 2 மணி நேரம்  கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மதுரை மற்றும் சுற்றுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயப் பணிகளுக்கு இந்த மழை கை கொடுக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுபாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. 

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில்  ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டறை திறக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி 24 மணி நேரம் செயல்படும் கட்டுபாட்டு அறை இன்று திறக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் தாங்கள் தங்கியுள்ள இடங்களின் அருகாமையில் மழை நீர் தேங்கி நின்றாலும், குப்பைகள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை வழங்க பொதுமக்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ்ஆப் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.