சனி, 28 அக்டோபர், 2017

மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி! October 28, 2017


மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!


நாடு முழுவதும் பொறியியல் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க ஏதேனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா?  என்பது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

30 தனியார் பொறியியல் கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கழகம் வளாக நேர்முகத் தேர்வு நடத்துவதை எதிர்த்து கரூரை சேர்ந்த நடராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி என். கிருபாகரன் இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

மேலும், அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகள் இருப்பதால், பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து 
வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

இந்த வழக்கில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளரையும் எதிர்மனுதாராக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும், நாடு முழுவதும் பொறியியல் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க ஏதேனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கும் 12 கேள்விகளை நீதிபதி எழுப்பினார். அதில், 

இந்தியாவில் எத்தனை பொறியியல் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்? 

அதில் வெற்றிகரமாக படிப்பை முடித்து வெளியேறுபவர்கள் எத்தனை பேர்? 

எத்தனை பொறியியல் பட்டதாரிகள் தற்போது வேலையின்றி தவிக்கின்றனர்? 

அதில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் எத்தனை பேர்? 

தேவைக்கு அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருப்பதால் கூடுதலாக உள்ள கல்லூரிகள் மூடப்படுமா? போன்ற கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. 

மேலும், வழக்கு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.