வெள்ளி, 20 அக்டோபர், 2017

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டெங்குவிற்கு 11 பேர் பலி..! October 19, 2017

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் டெங்குவிற்கு 11 பேர் பலி..!


டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் விவரம் கீழ்க்கண்டவாறு..

1. நாமக்கல் மாவட்டம் புதுக்கோம்பை பகுதியை சேர்ந்த கனராஜன் என்பவரது மகன் பிரவீன் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பிரவீன் இன்று உயிரிழந்தார்.

2. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வீ.நகரை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரது மகன் விஷ்ணுபிரகாஷ் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுகாதார சீர்கேடு காரணமாக அந்த பகுதியில் காய்ச்சல் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

3. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சவேரியார் பாளையத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் ஜெகதீசன், மகுடஞ்சாவடியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி காக்காப்பாளையம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார்.

4. சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள சிறுவங்கூர் பகுதியை சேர்ந்த பிரீத்தி என்ற 22 வயது இளம்பெண் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

5. ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தை சேர்ந்த மீனவர் அப்துல் ரகீம் என்பவரின் மகன் ஜமால் முகம்மது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

6. திருவாரூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சந்திரா என்ற பெண் உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

7. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் தமிழரசன், டெங்கு காய்ச்சல் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், காய்ச்சல் குணமாவதற்கு முன்பே மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, இன்று உயிரிழந்தார். 

8. மதுரை மாவட்டம் மேலூர் கோமதிபுரத்தைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் என்ற சவரத்தொழிலாளி கடந்த ஒரு வாரம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலூரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் மேல் சிகிச்சைக்காக மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மர்மகாய்ச்சல் என கூறப்பட்டு வரும் நிலையில் அவரது உறவினர்கள் டெங்கு என தெரிவிக்கின்றனர்.

9. திருவாரூரில்  மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 2 வயது குழந்தை உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் குழந்தை உடலை திருவாருர் பேருந்து நிலையம் அருகே  சாலை மறியல் போராட்டம் இதனால் 1 மணி நேரமாக சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

10. திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண் திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாலை உயிரிழந்தார்.

11. ராமநாதபுரம் மாவட்டம்  உத்தரகோசமங்கை அருகே உள்ள களக்குடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா, டெங்கு காய்ச்சலில் பலி.  ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்கு மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சையில் உயிரிழப்பு.