வெள்ளி, 27 அக்டோபர், 2017

​தேவர் சிலை தங்கக் கவசம்: வங்கி அதிகாரிகளுடன் மதுரை ஆட்சியர் பேச்சுவார்த்தை..! October 27, 2017

​தேவர் சிலை தங்கக் கவசம்: வங்கி அதிகாரிகளுடன் மதுரை ஆட்சியர் பேச்சுவார்த்தை..!


பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பேங்க் ஆஃப் இந்தியா மதுரை வங்கிக் கிளை பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கக் கவசத்தை, வெளியே எடுக்கும் அதிகாரம் அதிமுக பொருளாளருக்கும், தேவர் நினைவிட பொறுப்பாளர் ஆகிய இருவருக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஓ. பன்னீர் செல்வமும், டிடிவி தினகரன் தரப்பில் ரங்கசாமி என்பவரும் பொருளாளராக உள்ளனர். இவர்களில் யாரை அதிமுக பொருளாளராக ஏற்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், தங்க கவசத்தை வெளியில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கவசத்தை எடுக்கும் நோக்கில், ஓ. பன்னீர் செல்வம் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்கு சென்றுள்ளார். எனினும், டி.டி.வி தினகரன் தரப்பினர் நூற்றுக்கும் மேற்பட்டோர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கிக் கிளை முன்பாக கூடினர். 

இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மதுரை காவல் ஆணையர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் வங்கிக் கிளை முன்பாக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 13 கிலோ எடை கொண்ட இந்த தங்க கவசம் 4 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் வங்கியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Related Posts: