புதன், 25 அக்டோபர், 2017

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு October 25, 2017

குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 9-ம் தேதி முதற்கட்ட தேர்தலும், டிசம்பர் 14-ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில தேர்தல் அட்டவணை குறித்து இன்று செய்தியாளர்களை தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் குஜராத் மாநிலத்தில் தேர்தலுக்காக 50 ஆயிரத்து 128 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் எனக் கூறினார். 

இதில் 102 வாக்குச்சாவடிகள் அனைத்து மகளிர் வாக்குச் சாவடிகளாக அமைக்கப்படும். அனைத்து தேர்தல் வாக்குச் சாவடிகளிலும் மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக, சாய்தள பாதைகள் அமைக்கப்படும் என்றும் கூறினார். 

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் வாக்காளர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என்றும் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஒப்புகை சீட்டுகள் சோதனை அடிப்படையில் எண்ணப்படும் என்றும் அறிவித்தார்.  

பதற்றமான வாக்குச் சாவடிகள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, மத்திய பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார். குஜராத்தில் பதிவான வாக்குகள் டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.