வியாழன், 19 அக்டோபர், 2017

​பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு - பகிரங்க மன்னிப்பு கோரினார் நடிகர் கமல்! October 18, 2017

​பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு - பகிரங்க மன்னிப்பு கோரினார் நடிகர் கமல்!


பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு அவசரப்பட்டு ஆதரவு தெரிவித்ததற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தனியார் வார இதழ் ஒன்றில் நடிகர் கமல்ஹாசன், 'என்னுள் புயல் கொண்ட மையம்' என்ற தலைப்பில் 3-வது கட்டுரையை தற்போது எழுதியுள்ளார். அதில், ட்விட்டர் அரசியல் செய்கிறார் கமல்ஹாசன் என்ற விமர்சனத்திற்கும் அவர் பதிலளித்துள்ளார். 

20ம் நூற்றாண்டில் சர்வாதிகார மன்னர் ஆட்சியில் புரட்சிக் குரல்கள் எப்படி சிறு பத்திரிகைகள் மூலம் பரவி, பெரும் புரட்சிகள் உருவாயினவோ, அவற்றுக்கு நிகரான, அதைவிட வலிமையானது தனது டிவிட்டர் பதிவு என பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த உண்மையைப் பழமைவாதிகள் கூடப் புரிந்துகொண்டுவிட்ட நேரம் இது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பண மதிப்பு நீக்க நடவடிக்கை கபடமானது என உரத்த குரல்களுக்கு, பலவீனமான பதில்களை அரசு தருவதாக குற்றம்சாட்டியுள்ள கமல்ஹாசன், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு அவசரப்பட்டு ஆதரவு தெரிவித்ததற்கு பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதாகக் கூறியுள்ளார். 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தாஜ்மஹால் பெயர் விடுபட்டது, ‘பன்முகத்தன்மை இழந்துவரும்’ நாட்டில் மக்களை பயமுறுத்தும் அறிகுறிதான் என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

விமர்சனங்களை மதியாது அக்கறையின்றி செயல்படுபவர்களிடமிருந்து சாமானியர்களை பாதுகாக்க வேண்டியது பகுத்தறிவாளர்கள் மட்டுமின்றி நேர்மையான பக்தர்களின் கடமை என்றும் நடிகர் கமல்ஹாசன் தனது கட்டுரையில் கூறியுள்ளார்