பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை வழங்காததைக் கண்டித்து நாகையில், குறைதீர்க் கூட்டத்திற்கு விவசாயிகள் மண்ணெண்ணெய் பாட்டில், பால்டாயில், தூக்குக் கயிற்றுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்ட ஆட்சியர் அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டத்திற்கு விவசாயிகள் பலர் மண்ணெண்ணெய் பாட்டில்,பால்டாயில், தூக்கு கயிறுடன் வருவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த அனைவரையும் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த மாதானம் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரை காவலர்கள் கைது செய்தனர். இதையடுத்து மற்றொரு விவசாயி, தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதனால் நாகை மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து விவசாயியை சமாதானபடுத்தும் முயற்சியில் வருவாய் கோட்டச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முற்பட்டனர். நவம்பர் 20 ஆம் தேதிக்குள் பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர்.
இதே போல், தஞ்சையில் பயிர்காப்பீடு தொகை வழங்காததை கண்டித்து பாதிக்கபட்ட விவசாயிகள் குறை தீர்க்கூட்டத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில காவல்துறையை அனுமதிக்ககூடாது எனவும் எச்சரித்தனர். சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.