குஜராத் சட்டப்பேரவையின் தோல்வி பயம் காரணமாகவே, பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை ஆகியவை நாட்டை படுகுழியில் தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
நாட்டு மக்களின் மனநிலை தெரியாமல் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார். நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியினர் கூறுவதாகவும், ஆனால், மக்கள் பணம் இல்லாமல் திண்டாடுவதாகவும் அவர் கூறினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ஊழல்களுக்கு மிக முக்கிய காரணம் என குற்றம் சாட்டிய கபில் சிபல், கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாட்டில் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மத்திய அரசு விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதேபோல், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதாக கூறும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பது குறித்து பேசாதது ஏன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கைகளினால், வேலைவாய்ப்பு குறைந்துள்ளதாகவும், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
வேளாண் துறையும், சிறு வணிக நிறுவனங்களும் முற்றிலும் முடங்கிவிட்டதாகவும் டி.ராஜா விமர்சித்தார். நாட்டில் அத்தியாசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாகவும், ஒவ்வொரு நபரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பாரதிய ஜனதா கட்சியினர் பேசி வருவது கண்டித்தக்கது என்றும் டி.ராஜா கூறினார்.