வெள்ளி, 27 அக்டோபர், 2017

எண்ணூர் அனல் மின் நிலையத்தால் வெள்ள அபாயத்தில் வடசென்னை! October 27, 2017

எண்ணூர் அனல் மின் நிலையத்தால் வெள்ள அபாயத்தில் வடசென்னை!


வடகிழக்கு பருவமழை ஓரிருநாளில் தொடங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆனால், எண்ணூர் பகுதியில் செயல்படும் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பலாலும்,  நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும், வடசென்னை பகுதிக்கு வெள்ள அபாயம் உருவாகியுள்ளது.

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில், அடையாறு பாயும் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக ஆற்றுப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், பருவமழை தீவிரமாகப் பெய்தால், இந்த ஆண்டு எண்ணூர் பகுதியில் மிகப்பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எண்ணூர் பகுதியில் உள்ள அனல் மின் நிலையத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சாம்பல் கொட்டப்படுவதால், மழைநீர் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், கனமழை பெய்யும் போது வடசென்னை பகுதிகளான அத்திப்பட்டு, தாழங்குப்பம் போன்றவை வெள்ளக் காடாக மாறும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். 

ஆயிரக்கணக்கான ஏக்கரில் கொட்டப்பட்டிருக்கும் சாம்பல் கழிவுகளை அகற்ற பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், தற்போது வரை அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய புகாராக இருக்கிறது. மேலும், கொசஸ்தலை ஆற்றின் முகத்துவாரத்தையும், தூர்வாராமல் இருப்பதால், வடசென்னை பகுதியில் இருந்து வெள்ள நீர் வெளியேறி கடலில் கலக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. 

ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்காததால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்தால் மட்டுமே வடசென்னை மக்கள் தங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.