திங்கள், 30 அக்டோபர், 2017

சித்தா மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றம்’ October 27, 2017

Image

ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பது சட்டப்படி தவறு என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை பாப்பன்குளத்தைச் சேர்ந்த காட்டுராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், ஹோமியோபதி படித்த தனது மனைவியை போலி மருத்துவர் என போலீஸார் கைது செய்ததாகவும், அவருடன் தனது இருமாதக் குழந்தையை அழைத்துச் சென்றனர் என்றும், தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், மனைவி, குழந்தையை விடுவிக்க மானாமதுரை நீதித்துறை நடுவருக்கும் உத்தரவிட வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. 

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு முன்பு விசாரணைக்கு  வந்தது. அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரரின் மனைவி ஹோமியோபதி படித்துவிட்டு, அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்ததால் கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்தார். இதையடுத்து ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பது சட்டப்படி தவறு என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், மனைவி, குழந்தையை விடுவிக்க  மனுதாரர் உரிய நீதிமன்றத்தில் முறையிடலாம், எனவும் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.