சனி, 28 அக்டோபர், 2017

இந்தியாவில் அதிக நன்கொடை பெற்ற கட்சிகளின் பட்டியல் வெளியீடு! October 28, 2017

இந்தியாவில் 2015-2016-ம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளின் பட்டியலில் திமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஜனநாயக சீர்திருத்தம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 2015-2016-ம் நிதியாண்டில் திமுக ரூ.77.63 கோடி  நன்கொடையாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு அடுத்தபடியாக, ரூ.54.93 கோடி நன்கொடையாக பெற்று அதிமுக 2-வது இடத்தை பிடித்துள்ளது. 3-வது இடத்தை தெலுங்கு தேசம் கட்சி பிடித்துள்ளது. அந்த கட்சி ரூ.15.97 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே சமயம் திமுக, அதிமுக மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் இ இதேகதுல் முஸ்லிமின் ஆகிய கட்சிகள் தங்களது வருவாயில் 80 சதவீதத்தை செலவு செய்யவில்லை என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிகம் செலவு செய்த மாநில கட்சிகளின் பட்டியலில், ஐக்கிய ஜனதா தளம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அந்த கட்சி 2015-2016-ம் ஆண்டில் ரூ.23.46 கோடி செலவிட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ரூ.13.10 கோடி செலவுடன் 2-வது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி ரூ.11.09 கோடி ரூபாய் செலவுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 32 மாநில கட்சிகளில் 14 கட்சிகள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ஐக்கிய ஜனதா தளம், மற்றும் ராஷ்டீரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் தங்களது வருமானத்தை விட சுமார் 2 மடங்கு செலவு செய்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

news7