செவ்வாய், 24 அக்டோபர், 2017

தீக்குளித்த சம்பவம்: கந்து வட்டிக்கொடுமை நிகழ்த்தியதாக பெண் உள்ளிட்ட 3 பேர் கைது October 24, 2017

தீக்குளித்த சம்பவம்: கந்து வட்டிக்கொடுமை நிகழ்த்தியதாக பெண் உள்ளிட்ட 3 பேர் கைது


கந்து வட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு கந்து வட்டிக்கொடுமை நிகழ்த்தியதாக பெண் உள்ளிட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த இசக்கிமுத்து மற்றும் சுப்புலட்சுமி தம்பதி அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளனர். இதற்கு கந்து வட்டியாக இதுவரை இரண்டு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் தொடர்ந்து கடன் கொடுத்த கும்பல் இவர்களை பணம் கேட்டு மிரட்டியுள்ளது. காவல்துறை மூலமாக இவர்களை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இது குறித்து பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மனமுடைந்த இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று  தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு பாளையங்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமியும், குழந்தைகள் சரண்யா மற்றும் அட்சயபரணியும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பலத்த தீக்காயமடைந்த இசக்கிமுத்துவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து, காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, தளவாய் ராஜ், மற்றும் காளிராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் திடீர் நெஞ்சு வலி காரணமாக முத்துலெட்சுமி தென்காசி அரசு மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார்.