சனி, 28 அக்டோபர், 2017

ஒரு கிராமத்துக்கே ஒரே பிறந்தநாள் அச்சடித்துக்கொடுத்த ஆதார்! October 28, 2017

ஒரு கிராமத்துக்கே ஒரே பிறந்தநாள் அச்சடித்துக்கொடுத்த ஆதார்!


உத்தரகாண்ட் மாநிலம் கைந்தி என்கிற கிராமத்தில் சுமார் 800 குடியிருப்புகள் உள்ளன. இந்தக்குடியிருப்புகளில் இருக்கக்கூடிய மக்கள் அனைவருக்கும் இந்திய ஆதார் மையம் சார்பாக ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த ஆதார் அட்டை அனைத்திலும், கிராம மக்கள் அனைவருக்கும் ஒரே பிறந்தநாள் அச்சடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்துஅந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைவருடைய ஆதார் அடையாள அட்டையிலும் அவருடைய பிறந்த தேதி ஜனவரி 1ம் தேதி எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆதார் மையம், அந்த ஊரில் உள்ள பலருக்கு தாங்கள் பிறந்த தேதியே சரியாக தெரியவில்லை என்றும், பிறந்தநாள் தேதிக்கான முறையான ஆவணங்கள் இல்லை என்றும் எனவே தான் ஒரே தேதி அச்சடித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், கிராமத்தில் பலர் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஆனால் முறையான பிறந்த தேதி குறிப்பிடப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆதார் அடையாள அட்டையில் இது போன்ற தவறுகள் இருப்பதாக செய்திகள் வெளியாவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம், ஆக்ரா அருகேயுள்ள மூன்று கிராமங்களில் வழங்கப்பட்ட ஆதார் எண்ணில் இதே போல, அனைவருக்கும் பிறந்ததேதி ஜனவரி 1ம் தேதி எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த மே மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 250 கிராமவாசிகளுக்கு இதேபோல ஒரே பிறந்தநாள் தேதி அச்சடித்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.