வெள்ளி, 20 அக்டோபர், 2017

தேசிய தகுதித்தேர்வை எதிர்கொள்ள முடியாத வேதனையில் மாணவ-மாணவியர் தற்கொலை! October 19, 2017

தேசிய தகுதித்தேர்வை எதிர்கொள்ள முடியாத வேதனையில் மாணவ-மாணவியர் தற்கொலை!


பயிற்சி மையங்களில் பயின்றும் நீட் உள்ளிட்ட தேசிய தகுதித்தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றிபெற முடியாத வேதனையில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் கடந்த 2 மாதங்களில் 50-க்கும் மேற்பட்ட  மாணவ-மாணவியர் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள முன்னணி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற சம்யுக்தா என்ற மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத வேதனையில் கடந்த திங்கட்கிழமை தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்துள்ளார். 12ம் வகுப்பில் 95% மதிப்பெண்கள் பெற்றிருந்த சம்யுக்தா, முன்னணி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்றிருந்த போதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் எழுதியுள்ள சம்யுக்தா, தேசிய தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாததால் ஏற்பட்ட வேதனைக் குறித்து எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மருத்துவர் ஆகவேண்டும் என்பது தனது கனவு என்பதை அவர் நினைவுக்கூர்ந்துவிட்டே நனவுலகில் இருந்து அகன்றுள்ளார்.

தனது மகளின் டாக்டர் கனவை நனவாக்க போராடிய கார் ஓட்டுநரான சம்யுக்தாவின் தந்தை, குழந்தைகளை இத்தகைய கோச்சிங் சென்டர்களில் சேர்ப்பதற்கு முன்பாக குழந்தைகளின் கஷ்டங்கள் குறித்து பெற்றோர்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, சமீபத்தில் நீட் பயிற்சி மையம் ஒன்றில் மாணவர்களை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனை அடுத்து, முன்னணி கோச்சிங் சென்டர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாணவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், 8 மணி நேரங்களுக்கு மேலாக இத்தகைய பயிற்சி மையங்கள் இயங்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரத்தை செய்தியாக்கியுள்ள ஆங்கில ஊடகங்கள், மாணவர்கள் தேசிய அளவிலான தகுதித் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள சிக்கல் குறித்த விவகாரமாகவே இதனை செய்தியாக்கியுள்ளனர்.  தேர்வு மையங்கள் மாணவர்களை சித்ரவதை செய்வதாகவும், மனித உரிமை பிரச்சனையுமாகவே இவ்விவகாரம் கையாளப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெரும்பான்மையானோர் நீட் தேர்வு போன்ற தேசிய தகுதித் தேர்வினை எதிர்த்து வருபவராகவே உள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும், நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதால் தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது நினைவுக்கூரத்தக்கது