வெள்ளி, 27 அக்டோபர், 2017

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு! October 27, 2017

​ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு!


உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவதற்கு தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. இதையடுத்து அங்கு தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜெயலலிதாவின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க, தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் நிதி வழங்க தான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமிழ் இருக்கை ஏற்படுத்துவதன் மூலம், அமெரிக்காவில் தமிழ் மொழியை அடிப்படையாக கொண்ட ஆய்வுகள் நடைபெறும் என்றும், நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை பதிப்பித்தல் போன்ற பணிகள் மூலம், தமிழ் மொழியின் வளம் உலகறியச் செய்ய வழிவகை ஏற்படும் என்றும், முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பாக முதல் முதலில் டாக்டர் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சம்பந்தம் ஆகியோர் யோசனை தெரிவித்ததோடு நிதியுதவியும் அளித்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கியே அப்போதைய முதல் அமைச்சர் ஜெயலலிதா இதனை அதிமுக கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்ட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.