சனி, 20 மார்ச், 2021

ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் மூடப்படுமா? பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் விளக்கம்

 தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் பரவி வருவது குறித்து பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மூடப்படும் என்று செய்தி வெளியானது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய பொது முடக்கத்திற்குப் பிறகு, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல், 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் வெளியானது.

தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படுமா என்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், ஜனவரி மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. மே 3ம் தேதி 12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்குள் அனைத்து பாடங்களையும் நடத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது. இருந்தாலும், பாடத்திட்டங்களை குறைத்து தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால், ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு பள்ளிகளை நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது” என்று கூறினார்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படுவது குறித்து ஊடகங்களின்கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பதிலளித்தார்.

அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படவில்லை 9,10,11 மாணவர்களுக்கு மட்டும்தான் பள்ளிகள் நடைபெறுகிறது. அதனால், சமூக இடைவெளியுடன்தான் வகுப்புகள் நடைபெறுகிறது. கொரோனா தொற்று இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது. அதனால், அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றும் சுகாதாரத்துறையுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/education-jobs/schools-will-not-close-after-april-1st-will-continue-function-school-education-departrment-director-answer-283684/