முதல்வர் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா தனது பேச்சுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கோருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 26-ந் தேதி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா முதல்வர் பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இதில் முதல்வரின் பிறப்பு குறித்து சர்ச்சை கருத்தை கூறியதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. ஆ.ராசாவின் இந்த பேச்சு அதிமுகவினர் கடும் தெரிவித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த ஆ.ராசா, முதல்வர் பழனிச்சாமி குறுக்கு வழியில் முதல்வரானவா் என்றும், ஸ்டாலின் நேர் வழியில் அரசியலுக்கு வந்தவர் என்றும் குறிப்பிட்டதாக கூறியிருந்தார்.
தனது பேச்சுக்கு அவர் விளக்கம் அளித்தாலும், அவரது பேச்சுக்கு திமுகவை சேர்ந்த சில தலைவர்களே அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி, உள்ளிட்ட சில பெண் தலைவர்களும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர். மேலும் திமுகவின் பிரச்சாரத்தில் மரபையும் மாண்பையும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறி ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுகமாக கண்டனம் தெரிவித்திருந்தார். ஆனாலும் காவல்துறையில் ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று திருவெற்றியூரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, எனது தாய் மீது அவதூறு பரப்பிய ஆ.ராசாவிற்கு இறைவன் தக்க தண்டனை வழங்குவார் என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார். முதல்வரின் இந்த பிரச்சாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று அதிமுகவினர் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் அவர் மீதான புகார் குறித்து அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக ஆ.ராசா வெளிப்படையாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, எனது பேச்சை சுட்டிக்காட்டி முதல்வர் கண்கலங்கியதை அறிந்து மனவேதனை அடைந்தேன். நான் பேசியது சித்தரிக்கப்பட்டது என்று கூறினேன். ஆனாலும் எனது பேச்சால் முதல்வர் உள்ளம் காயப்பட்டிருந்தால் முதல்வர் பழனிச்சாமியிடம் மனம் திறந்து மன்னிகப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் எனது பேச்சு இரண்டு அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட விமர்சனம் அல்ல என்றும், பொதுவாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த மதிப்பீடும் ஒப்பீடும் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
source : https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-election-2021-a-rasa-say-sorry-to-cm-palanisamy-286811/