In Kerala, Sabarimala temple entry issue back on the table : கேரள சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் மீண்டும் சபரிமலை விவகாரம் சி.பி.எம் கட்சிக்கு சிக்கலாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை பயன்படுத்தி முதல்வர் பினராயி விஜயனை ஓரங்கட்ட நினைக்கிறது எதிர்க்கட்சி. மாதவிடாய் வயதிற்குள் இருக்கும் பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்ற 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஆதரவாக இருந்தார் பினராயி விஜயன். சொந்த மக்களின் கருத்திற்கும் கட்சியினர் கருத்திற்கும் மாறாக தன்னுடைய ஆதரவை அதற்கு வழங்கினார். இது 2019ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் சி.பி.எம் தோல்விக்கு வழி வகுத்தது என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது என்று கூறி முற்றுப்புள்ளி வைக்க முயலுகிறார் பினராயி விஜயன். இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தேர்தல் வாக்குறுதி நம்பிக்கையை பாதுகாக்க முயற்சிக்கும் என்றும் நாத்திகவாதிகளின் வாழ்விற்கான இடத்தை உறுதி செய்யும் என்று கூறியுள்ளது. எவ்வாறாயினும் நிலைப்பட்டை எடுக்க வேண்டிய அழுத்ததிற்கு ஆளான போது சி.பி.எம். தலைவரும், கோவில் விவகார அமைச்சருமான கடகம்பள்ளி சுரேந்திரன் கடந்த வாரம், 2018ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள் அனைவரையும் சோகமாக்கியது என்று கூறினார்.
சுரேந்திரன் கழகுட்டம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜகவின் சோபா சுரேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் சபரிமலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார் சோபா. சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளார் சீதாராம் யெச்சூரி கடகம்பள்ளியின் அறிக்கையில் இருந்து கட்சியின் அறிக்கையை விலக்கினார். சபரிமலை மீதான இடதுசாரிகளின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவு கேரளாவில் மறுமலர்ச்சி மரபுகளுக்கு ஏற்ப அமைந்தது . மேலும் உச்ச நீதிமன்றத்தை செயல்படுத்த அரசாங்கம் கடமைப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.
கழகுட்டம் பகுதியில் மட்டுமல்லாமல் மத்திய மற்றும் தெற்கு கேரளாவிலும் சபரிமலை விவகாரத்தை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது பாஜக. பாஜக வேட்பாளர் சோபா சுரேந்திரன் ”சபரிமலை மற்றும் நம்பிக்கைகளை பாதுகாத்தல் ஆகியவை இந்த தேர்தலில் மிக முக்கிய பிரச்சனைகளாக பார்க்கப்படுகிறது. சிபிஎம் பாரம்பரியத்தை மீறிய போதும் பாஜக தொண்டர்கள் நம்பிக்கையை பாதுகாக்க போராட்டம் செய்தனர். அமைச்சர் சுரேந்திரன் சமூக செயற்பாட்டாளர்கள் சபரிமலை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்” என்று குற்றம் சுமத்தினார்.
திருப்புனித்துரா தொகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் சிபிஎம் வேட்பாளர் எம் ஸ்வராஜின் அப்போதைய அறிக்கையை மேற்கோள் காட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர். போராட்ட சமயத்தில் ஐயப்பன் ஒன்றும் நிரந்தர பிரம்மச்சாரி இல்லை என்று அவர் கூறியிருந்தார். மாநிலங்களவை உறுப்பினரும் பாஜக திருச்சூர் வேட்பாளருமான சுரேஷ் கோபி இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தாண்டவத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேர்தல் இது என்று கூறினார்.
இந்து ஐக்கிய வேதி, சபரிமலை பாதுகாப்பு சமிதி போன்ற இந்து அமைப்புகள் கீழ் சி.பி.எம்க்கு எதிரான குரல்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. இந்த இந்து அமைப்புகள் கேரளா முழுவதும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தி சபரிமலைக்கு பெண்களை அழைத்து சென்றவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டுமென வாக்காளர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
சமிதியின் ஒருங்கிணைப்பாளர் எஸ் ஜே ஆர் குமார் நாங்கள் 2018 ஆண்டில் நடைபெற்றது போன்ற நிகழ்வு மீண்டும் நடை பெறுவதை விரும்பவில்லை. நாங்கள் எந்த கட்சிக்கும் வாக்களியுங்கள் என்று கேட்கவில்லை. ஆனால் இந்து நம்பிக்கைகளை பாதுகாக்கும் அரசாங்கம் எங்களுக்கு வேண்டும். போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெறும் இடதுசாரி அரசின் முடிவு மிகவும் தாமதமாக வந்தது. பதினெட்டாயிரம் வழக்குகளில் 58,000 நபர்கள் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்ட பிப்ரவரி 26ம் தேதி அன்று தான் தீவிரமற்ற வழக்குகளை வாபஸ் வாங்க இருப்பதாக விஜயன் அரசு அறிவித்தது. ஆனாலும் காவல்துறையினரால் அதனை தொடர முடியாது. இறுதி தீர்ப்பிற்கு பின்னர் அனைத்து பங்குதாரர்களிடமும் இது குறித்து பேசப்படும் என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அப்போதைய காங்கிரஸ் தலைவர் மற்றும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வரவேற்றுப் பேசினார். இருப்பினும் மாநில காங்கிரஸ் எச்சரிக்கை தெரிவித்தது. சபரிமலை விவகாரத்தில் விஜயனின் நடைமுறையை காங்கிரஸ் தாக்கி பேசியதால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 19 தொகுதிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வெற்றியை தேடித் தந்தது. பாஜகவின் வாக்கு வங்கியையும் இது அதிகரித்தது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் அனைத்து மக்களின் நம்பிக்கையும் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சபரிமலை விவகாரத்தில் மரபுகளை காக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திய உயர்சாதி அமைப்பான நாயர் சர்வீஸ் சொசைட்டியினை கையில் கொண்டு காய் நகர்த்தி வருகிறது காங்கிரஸ்.
கடகம்பள்ளி சுரேந்திரனின் மன்னிப்பிற்கு பிறகு சி.பி.எம். இந்த விவகாரத்தில் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தியது என்.எஸ்.எஸ். மேலும் அதன் செயலாளர் எஸ். சுகுமாறன் நாயர், எல்.டி.எஃப். அரசு, பெண்கள் அனுமதிக்காக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிராமணபத்திரத்தை திரும்பப் பெறவேண்டும் என்று கூறியது. சி.பி.ஐ. மாநில செயலாளர் கணம் ராஜேந்திரன் அரசு அப்படி செய்யாது என்று கூறினார். அப்போது சுகுமாறன், நம்பிக்கை என்பது ஆக்ஸிஜன் போன்றது. அதை உணராமல் ஆட்சியில் இருந்தவர்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/in-kerala-sabarimala-temple-entry-issue-back-on-the-table-286133/