மக்கள நீதி மய்யம் கட்சி 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் கனிசமான வாக்குகள் பெற்று பிரபலமடைந்தனர்.
இதில் பல தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் தான் வெற்றியை தீர்மானித்த்தாகவும் கூறப்பட்டது. மக்களவை தேர்தல் தந்த ஊக்கத்தை தொடர்ந்து தற்போது தமிழக சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். ஆனால் அதன்பிறகு ஒரு சில கட்சிகளுடன் பேசியதாக குறிப்பிட்டிருந்த அவர், காங்கிரஸ் கட்சி மற்றும் அமமுக கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தார். அதற்கு ஏற்றார்போல் காங்கிரஸ் கட்சியும், கமல்ஹாசன் எங்களுடன் இணைய வேண்டும் என்று கூறினர்.
ஆனால் தற்போது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது. இதில் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளிலும், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகள் தலா 40 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதனைத் தொடர்ந்து மக்கள் நிதி மய்யம் சார்பில் முதற்கட்டமாக 70 தொகுதிகளுக்காக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில், தமிழகத்தில் பிரபலமான பலர் இடம்பெற்றுள்ளனர்.
- விஞ்ஞானி பொன்ராஜ் :
விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான ஏபிஜே அப்துல்கலாமின் உதவியாளர் மற்றும் முக்கிய ஆலோசகரான விஞ்ஞானி பொன்ராஜ், சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். முன்னதாக அப்துல்கலாம் இறந்தவுடன் தனியாக கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்த்தாகவும், ஆனால் பாஜக அந்த முயற்சிக்கு தடை போட்டதாகவும் பொன்ராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ரஜினியின் கட்சியில் இணையும் முடிவில் இருந்த பொன்ராஜ் தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். தற்போது அக்கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் அவர் சென்னை அண்ணா நகர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- கவிஞர் சினேகன் :
தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அனைவராலும் அறியப்பட்ட கவிஞர் சினேகன், ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்ற இவர், அந்த நிகழ்ச்சி முடிந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில். சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட அவர் 5-வது இடம்பிடித்தார். அந்த வகையில் தற்போது சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- ஓய்வு பெற்ற ஐஏஸ் அதிகாரி டாக்டர். சந்தோஷ் பாபு :
1995ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் சந்தோஷ் பாபு, கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். தமிழக அரசின் தகவல் தொழிநுட்ப துறை செயலாளராகப் பணியாற்றிய இவர், பாரத் நெட் விவகாரத்தில் அரசுடன் ஏற்பட்ட மோதலால், விருப்ப ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த அவர், அதன்பின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த அவர், தற்போது வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- சட்டபஞ்சாயத்து இயக்கத்தில் தலைவர் சிவ இளங்கோ மற்றும் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் :
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று தொடங்கப்பட்ட இயக்கம் சட்டப்பஞ்சாயத்து இயக்கம். தனியார் நாளிதழில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய சிவ இளங்கோ, ஐடி துறையில் பணியாற்றிய செந்தில் ஆறுமுகம் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் அரசு அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. தற்போது மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்துள்ள சட்டசப்பஞ்சாயத்து இயக்கதில் தலைவர் சிவ இளங்கோ தாம்பரம் தொகுதிக்கும், செந்தில் ஆறுமுகம் பல்லாவரம் தொகுதிக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- சினேகா மோகன்தாஸ் (பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வாகித்தவர்)
பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒரு நாள் நிர்வகித்த பெண் என்றே பெருமைபெற்ற சினேகா மோகன்தாஸ், சமூக ஆர்வலரான இவர், ஃபுட் பேங்க் இந்தியா என்ற அறக்கட்டளையை நிறுவி வீடுகள் இல்லாத ஏழைகள் ஆதரவற்றவர்கள், மற்றும், சாலையோரங்களில் இருப்பவர்கள் என தினமும் நூற்றுக்கணக்கான மக்களின் பசியை போக்கி வரும் இவர், பட்டினியால் வாடும் மக்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே எனது நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- பத்மபிரியா (யூடியூப் செலிபிரிட்டி)
யூடியூப்பில் அழகுக் கலை நிபுணராக பலராலும் அறியப்பட்ட பத்மபிரியா இவர் சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். மேலும் சமூக ஆர்வலரான இவருக்கு கட்சியில், சுற்றுச்சூழல் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில், மதுரவாயில் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
source https://tamil.indianexpress.com/election/tamilnadu-assembly-election-mnm-celebrity-candidate-282686/