வெள்ளி, 12 மார்ச், 2021

தமிழக சட்டசபை தேர்தல் : இந்தியா கம்யூனிஸ்ட், ம.ம.க போட்டியிடும் தொகுதிகள் எவை?

  தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மற்றும் மனிதநேய மக்கள் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதில் தி.மு.க தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு அணியும், மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் களமிறங்கியுள்ளது. கடந்த வாரம் முழுவதும் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நேற்று முன்தினம் முதல் ஆலோசனை நடைபெற்று வந்தது.

இந்த ஆலோசனையில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகி வருகிறது. இதில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாவனி சாகர் (தனி), திருப்பூர் வடக்கு, வால்பாறை (தனி), சிவகங்கை, திருத்துறைப்பூண்டி (தனி) தளி ஆகிய 6 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட உள்ளதாக கையெழுத்தாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்ந்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்து. அதில், மணப்பாறை (தனி) பாபநாசனம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்து. இதில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் எந்த தொகுதியில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்பது இன்றும் ஓரிரு நாட்களில்தெரிய வரும்.

இது ஒருபுறம் இருக்க டிடிவி தினகரனின் அமமுக கட்சி எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும், கூட்டணி முடிவு செய்யப்பட்டதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்திருந்தார். அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்ட அவர், ஓவைசி, கோகுல மக்கள் கட்சி, மற்றும் மருதுசேனைகள் சங்கத்துடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி, மற்றும் மருதுசேனைகள் சங்கத்திற்கு தலா ஒரு தொதியும் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியுடனான தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில், சுமோக முடிவு எட்டப்பட்டு அந்த கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆலந்தூர், ஆம்பூர், திருச்சி மேற்கு, திருவாரூர், மதுரை மத்தியம், பாளையங்கோட்டை என 6 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/election/tamilnadu-assemnly-election-2021-dmk-alliance-cpi-and-mmk-constituencies-282622/