ஞாயிறு, 21 மார்ச், 2021

தேர்தல் விதி மீறல்: உங்க கண்முன்னே நடக்கும் அநியாயங்களை இதில் பதிவு பண்ணுங்க!

 Tamilnadu assembly election 2021 cVigil app tamil news: தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் தேசிய மற்றும் மாநில காட்சிகள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றன. இதற்கிடையில் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் அறிவித்தது. அதோடு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து நேரடியாக புகார்களை தெரிவிக்க சி-விஜில் (cVigil) எனும் மொபைல் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்கள் தொகுதி வேட்பாளர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால், அதை புகைப்பமாகவோ அல்லது வீடியோ கோப்பாகவோ பதிவு செய்து, அந்த வேட்பாளர் என்ன தவறு செய்தார் என்ற குறிப்புகளை வழங்கி இந்த செயலி மூலம் அனுப்பலாம்.


நீங்கள் அனுப்பும் புகார் மாவட்ட தேர்தல் அதிகாரியின் கட்டுப்பட்டு அறைக்கு நேரடியாக செல்லும். மேலும் புகார் எந்த பகுதியில் இருந்து பெறப்பட்டதோ அந்த பகுதிக்கு பறக்கும்படை விரைந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மற்றும் நீங்கள் அளித்த புகாரின் நிலை குறித்து அறியவும் இதில் வசதியுள்ளது.

பணம் விநியோகம், பரிசுகள், மதுபானம், அரசு அலுவலகங்களில் சுவரொட்டிகள் மற்றும் பேனர் வைப்பது, அரசுடைமைகளுக்கு சேதம் விளைவிப்பது, தேர்தல் நாளில் பூத்தில் பிரச்சாரம் மற்றும் பிரச்னை செய்வது போன்ற விதி மீறல் செயல்களை பதிவிட்டு இந்த செயலி மூலம் அனுப்பலாம். இந்த சி-விஜில் செயலியை தற்போது ஆண்டராய்டு மற்றும் ஆப்பிள் பயன்பாட்டு தளங்களின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

source https://tamil.indianexpress.com/technology/tamilnadu-assembly-election-2021-cvigil-app-tamil-news-report-poll-code-violations-anonymously-via-cvigil-app-says-eci-284656/