சனி, 13 மார்ச், 2021

காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் பட்டியல்: 5 இடங்களில் பாஜகவுடன் நேரடி மோதல்

 திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளின் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வியாழக்கிழமை அறிவித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் கூட்டணிகளை இறுதி செய்து அந்தந்த கட்சி போட்டியிடும் தொகுதிகளையும் வேட்பாளர்கள் பட்டியலையும் அறிவித்து வருகின்றன.


திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் சில தினங்களுக்கு முன்பு கையெழுத்தானது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 இடங்கள் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது. இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, பொன்னேரி, ஓமலூர், அறந்தாங்கி உள்ளிட்ட 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக அறிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசியதாவது: “எங்களுடைய மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில், திமுகவுக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் 25 தொகுதிகளுக்கான உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் எவ்வாறு எதிர்பார்த்தோமோ, நாங்கள் எதை விரும்பினோமோ அவைகள் எல்லாம் முழுமையாக நடைபெற்றிருக்கின்றன. எனவே, அந்த வகையில் மிகவும் சிறப்பான பேச்சுவார்த்தையாகவும் நம்பிக்கைய தருகிற அமைப்பாகவும் நாங்கள் மகிழ்ச்சியடைகிற நிகழ்வாகவும் இது நிகழ்ந்திருக்கிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற கூட்டணி கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இந்த கூட்டணியின் சிறப்பு தமிழக அரசியலில் மட்டுமல்லால் இந்திய அளவிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் இந்த தேர்தலினுடைய சிறப்பு. வெறுமனே ஆட்சி அதிகாரத்தை மாற்ற வேண்டும் என்பது மட்டும் நம்முடைய நோக்கமல்ல. அதற்கு மாறாக மக்கள் நம்பிக்கையோடு வாழ வேண்டும். வளர்ச்சியுடன் இருக்க வேண்டும். மக்களுக்கு வாழ்வதற்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பாதுகாப்பாக வாழ்வதை உணர வேண்டு என்ற சமூக நீதிக்காக, சமூக ஒற்றுமைக்காக இந்த கூட்டணி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கூட்டணியில் மிகவும் புகழ்வாழ்ந்த அரசியல் கட்சிகள் எல்லாம் இருக்கிறார்கள். எனவே இந்த கூட்டணியின் வெற்றி தமிழகத்தின் வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் வெற்றியாவும் இருக்கும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடி அரசாங்கத்தின் தவறுகளையும் இந்தியாவை பிளவுபடுத்துகிற அவர்களுடைய முயற்சிகளை வீழ்த்துவதாகவும் ஊழல் நிறைந்த அதிமுகவை ஆட்சியை அகற்றுவதற்காகவும் இந்த கூட்டணி அமைந்திருக்கிறது. இந்த கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறோம். ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நடைபெறும்” என்று கூறினார்.

அப்போது செய்தியாளர்கள், கே.எஸ்.அழகிரியிடம் காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி:

1.ஓமலூர்,
2.பொன்னேரி,
3.சோளிங்கர்,
4.ஸ்ரீவைகுண்டம்,
5.தென்காசி,
6.சிவகாசி,
7.அறந்தாங்கி,
8.ஸ்ரீவில்லிபுத்தூர்,
9.உடுமலைப்பேட்டை ,
10.மயிலாடுதுறை,
11.வேளச்சேரி,
12.ஈரோடு கிழக்கு,
13.திருவாடானை,
14ஊத்தங்கரை,
15.கோவை தெற்கு
16.ஶ்ரீபெரும்புதூர்,
17.உதகமண்டலம்,
18.காரைக்குடி,
19.மேலூர்,
20.சிவகாசி,
21.குளச்சல்,
22.விளவங்கோடு,
23.கிள்ளியூர்,
24.விருத்தாச்சலம்,
25.நாங்குநேரி” ஆகிய 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுறது என்று அறிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/ks-alagiri-announces-congress-contesting-constituencies-list-in-tamil-nadu-assembly-elections-2021/