திங்கள், 22 மார்ச், 2021

குவலயமே விழித்துக்கொள்

 இவ்வுலகில் தண்ணீர் என்பது இன்றியமையாத ஒன்று. ஆனால், உலகில் உள்ள எந்த நாடும் தண்ணீரின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவில்லை.

தண்ணீரை வைத்து பொருட்களை சுத்தம் செய்த காலம் போய் அனைத்து நாட்டினரும் இன்று தண்ணீரையே சுத்தம் செய்கின்ற நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டார்கள். தண்ணீர் பயன்படாத, பயன்படுத்தப்படாத இடமே இவ்வுலகில் இல்லை. தண்ணீர் இவ்வுலகில் குறைய குறைய உலகம் அழிவை நோக்கி சென்றுகொண்டே இருக்கும். இயற்கை அழிவை நோக்கிச் சென்றபின் ஒவ்வொரு உயிரினங்களாக அழிந்தபின்பு, கடைசியில் மனிதனும் அழிந்து இவ்வுலகமே இல்லாமல் போய்விடும். தண்ணீரின் ஆதாரமாக இருக்கக்கூடிய ஏரி, குளம், ஆறுகளில் மழையின் அளவு குறையத் தொடங்கியதால் பாலைவனம் போல் ஆக நாட்கள் வெகுதூரம் இல்லை. தண்ணீருக்கான பிரச்னைகள் நாடுகளுக்கு இடையிலும், மாநிலங்களுக்கு இடையிலும், ஊர்களுக்கு இடையிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

மூன்றாம் உலகப்போர் ஏற்படுமேயானால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்பதை அழுத்தமாக கூறிக்கொள்கிறேன். புவி நீர்ப்பரப்பானது 71% நீரினால் சூழப்பட்டுள்ளது. அதில் 97% கடல் நீர். அதாவது, நல்ல நீர் வெறும் 3% தான். இந்த 3% நீரைத்தான் மனிதன் தனது தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்டு விவசாயம், தொழிற்சாலை, மின் உற்பத்தி, சுரங்க வேலை, கார் தயாரித்தல், குளிர் பாணம் தயாரித்தல் உள்ளிட்ட எல்லா விதமான வேலைகளுக்கும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இவ்வுலகில் பாதி பிரச்னைகளுக்கு நீர்தான் காரணம். குறிப்பாக மனிதனுக்கு போதுமான அளவு தண்ணீர் ஆரம்ப காலத்தில் கிடைத்தாலும் இப்போது தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மனிதன் ஒரு நாளைக்கு 500 முதல் 1000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறான். நல்ல தண்ணீர் கிடைக்காமல் தூய்மையற்ற நீரை அருந்துவதால் காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உலகில் 4.5% பேர் இறந்துபோகிறார்கள். உலக அளவில் நீர் பற்றாக்குறையானது பரவலாக 40 நாடுகளில் காணப்படுகிறது. அவற்றுள் முக்கியமாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், வெனிசுலா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நீர் பற்றாக்குறையானது அதிக அளவில் காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் 1993ம் ஆண்டில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தருணத்தில் நாம் பார்க்க இருப்பது ஆரல் கடல் (The Aral Sea). சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரல் கடல் என்று ஒன்று இருந்தது. இப்போது அந்த ஆரல் கடலானது இல்லை என்றே சொல்லலாம். ஆரல் கடல் என்று அழைக்கப்பட்டாலும் அது உண்மையில் மிகப்பெரிய ஏரி. ஆரல் ஏரி கிட்டத்தட்ட 67,300 சதுர கி.மீ பரப்பில் கடல் போல் பரந்து விரிந்து கடல் போல அமைந்திருந்தது. அதன் பரப்பு கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் பாதி அளவுக்கு மேல் இருக்கும். விண்வெளியில் இருந்து பார்த்தாலே தெரியும் உலகின் நான்காவது பெரிய ஏரியை இதனால்தான் ஆரல் கடல் என்று அழைத்தார்கள்.

ஆரல் கடலானது எங்கு அமைந்துள்ளது என்றால், உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் நாடுகளுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த கடல் வெறும் 40 ஆண்டுகளில் மனிதனால் காணாமல் ஆக்கப்பட்டது. இந்த கடலில் கரையோரம் நிறைய கிராமங்கள் இருந்தது. அவர்கள் இந்த கடலை நம்பிதான் இருந்தார்கள். ஏனென்றால், ஒரு ஆண்டுக்கு 10 ஆயிரம் டன்களுக்கு மேல் மீன்கள் பிடிக்கப்பட்டது. பல லட்சம் மக்கள் இந்த கடலை நம்பிதான் வாழ்க்கையை நடத்திக்கொண்டுவந்தார்கள். இப்போது இந்த கடலானது சிறு குளம்போல ஆகி விட்டது. இந்த ஆரல் கடலில் நீர் வற்றிப் போனதால் மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட கப்பல்கள் ஆங்காங்கே துருப்பிடித்து பாலைவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது போல காட்சியளிக்கிறது.

இன்று சுற்றுலாவாசிகள் புகைப்படம் எடுக்க ஆரல் கடலுக்கு சென்று பார்க்கிறார்கள். அவர்கள் யாராலும் அந்த இடத்தில் கடல் இருந்தது என்று நம்பவே முடியவில்லை. ஏனென்றால், கடல் இருந்ததற்கான தடயமே தெரியவில்லை. பாலைவனம்போல்தான் இருக்கிறது. இந்த ஆரல் கடல் பாலைவனமாக மாறியதற்கு முக்கிய காரணம் மனிதன்தான். மனிதனின் பேராசைதான் காரணம்.

ஆரல் ஏரிக்கு நீரானது கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பாமிர் என்கிற மிகப்பெரிய மலைத்தொடரில் இருந்து அமுதாரியா மற்றும் சிறுதாரியா என்ற இரண்டு ஆறுகளின் மூலம் ஆரல் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருந்தது. இந்த இரண்டு ஆறுமே நமது இமய மலையில் இருந்து வருகின்ற கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற மிகப்பெரிய ஆறுகள் ஆகும். ஆண்டு முழுவதும் இந்த இரண்டு ஆறுகள் மூலம் ஆரல் கடலுக்கு தண்ணீர் வந்துகொண்டு இருந்ததால் ஆரல் கடலின் நீர்மட்டம் குறையாமலே இருந்தது. மீன்களும் ஏராளமாக கிடைத்துக்கொண்டிருந்தது.

ஆரல் கடலானது செழிப்பாக இருந்த வேலையில் அதன் அழிவானது 1960ம் ஆண்டுகளில் ஆரம்பம் ஆனது. அன்றைய காலகட்டங்களில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் மிகப்பெரிய பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலம். 1991ம் ஆண்டு வரை மத்திய ஆசிய நாடுகள் அனைத்துமே சோவியத் யூனியன் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அக்காலகட்டங்களில் எகிப்து பருத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்துகொண்டிருந்தது. சோவியத் யூனியனுக்கு பருத்தியை ஏற்றுமதி செய்துகொண்டிருந்த எகிப்து ஏற்றுமதியை நிறுத்திவிட்டு திடீர் என்று அமெரிக்காவின் பக்கம் சென்று விட்டார்கள். இது சோவியத் யூனியனுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஏனென்றால், அக்காலகட்டங்களிலில் பருத்தி மிகப்பெரிய சந்தைப் பொருள். அதாவது, லாபம் அதிகம் ஈட்டக்கூடிய பொருள். நீண்ட நெடிய நாட்களாக என்ன செய்யலாம் என்று யோசித்த சோவியத் யூனியன் உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பக்கத்தில் உள்ள ஃபெர்கானா வேலி என்ற இடத்தில் பருத்தியை பயிர் செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட சோவியத் யூனியன் அதற்கான வேலையையும் தொடங்கியது.

பருத்தி உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் நீர் அதிக அளவில் தேவைப்படும். ஆதலால், 1960-ல் அமுதாரியா மற்றும் சிறுதாரியா ஆகிய இரண்டு ஆறுகளையும் ஃபெர்கானா வேலி பக்கம் ஆயிரக் கணக்கான கால்வாய்கள் மூலம் திருப்பிவிட்டது. சோவியத் யூனியன் எதிர்பார்த்ததுபோல, பருத்தி உற்பத்தி அமோகமாக இருந்தது. எகிப்து நாட்டுடன் போட்டி போடும் அளவிற்கு உஸ்பெகிஸ்தான் நாட்டு பருத்தியும் இருந்தது.

ஆனால், அதன் பின்விளைவுகள் மிகக் கொடுமையாக இருக்கும் என்பதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆரல் கடலுக்கு சென்று சேர்கின்ற நீர் முற்றிலுமாக தடைப்பட்டது. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக ஆரல் கடல் நீரானது வற்றத் தொடங்கி உப்புத் தன்மையும் அதிகரித்தது. இதனால், ஆரல் கடலில் இருந்த மீன்களும் அறியவகை உயிரினங்களும் இறந்துபோக தொடங்கியது. ஒரு பக்கம் பருத்தி உற்பத்தி அமோகமாக இருந்தாலும் மீன் உற்பத்தி முற்றிலுமாக நின்றுபோனது. இதனால், கடல் போல இருந்த ஆரல் ஏரி சின்ன சின்ன குளங்கள் போல் காட்சியளிக்க அரம்பித்தது.

ஆரல் கடலின் கரையோரம் மீன்பிடி தொழிலை நம்பி இருந்த பல்லாயிரக் கணக்கான் மக்கள் வாழ வழியின்றி வேறு நாடுகளுக்கு சென்று அதில் பல பேர் இறந்தும் போனார்கள். இது எல்லாம் வெறும் 30 – 40 ஆண்டுகளில் நடந்து முடிந்தது. 1991ம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த பிறகு, ஆரல் கடலுக்கு தண்ணீர் கொண்டுவந்த அமுதாரியா மற்றும் சிறுதாரியா ஆறுகள் கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நான்கு நாடுகளின் வழியாக வர ஆரம்பித்தது. இந்த இரண்டு ஆறுகளுமே கிர்கிஸ்தான் நாட்டில்தான் ஆரம்பம் ஆகின்றது. இதனால், இந்த ஆறுகள் எங்களுக்குதான் சொந்தம் என்று சொன்ன கிர்கிஸ்தான் இந்த ஆறுகளின் நடுவில் கம்பரட்டா என்ற அணையைக் கட்டியது. இதனால், உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தானுக்கு தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை. இதனால், உஸ்பெகிஸ்தான் நாட்டில் பருத்தி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆகையால், உஸ்பெகிஸ்தானுக்கும் கிர்கிஸ்தானுக்கும் போர் மூளும் சூழல் உருவானது. கர்நாடகா எப்படி காவிரியை சொந்தம் கொண்டாடி தண்ணீரை விட மறுக்கிறார்களோ அதே போல, கிர்கிஸ்தானும் தண்ணீர் விட மறுக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் வந்துகொண்டிருந்த தண்ணீரும் இந்த சண்டையின் காரணமாக ஆரல் ஏரிக்கு முற்றிலுமாக தண்ணீர் வரத்து நின்றுவிட்டது.

ஆரல் கடல் அழிந்துபோனதை மிகப்பெரிய இயற்கை பேரழிவாக கருதுகிறார்கள். இந்த ஆரல் கடலை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இப்போது ஏரியின் ஒரு சில இடங்களில் நீர்மட்டம் உயர ஆரம்பித்துள்ளது. சில இடங்களில் மீன்களும் திரும்பவர ஆரம்பித்துள்ளது. ஆனால், என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆரல் கடலை மீண்டும் கொண்டுவர முடியாது என்பதுதான் உண்மை.

இயற்கையை செயற்கையால் வெல்ல முடியும். ஆனால், செயற்கையால் இயற்கையை மீண்டும் கொண்டுவர முடியாது. என்பதுதான் உண்மை. ஒரு ஆற்றின் வழியை மாற்றி வேறு வழியில் ஓட வைத்தால். அதனால், ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை இந்த ஆரல் கடல் மூலம் நாம் அறிந்துள்ளோம். ஒரு ஆறானது கண்டிப்பாக கடலில் சென்று சேர வேண்டும் இல்லை என்றால் கடல் நீரானது உள்ளே புகுந்து அதன் அருகில் இருக்கின்ற நல்ல நீரையும் உப்பு நீராக மாற்றிவிடும். அதற்கு மிக முக்கிய உதாரணம், காவிரி டெல்டா பகுதியில் ஆற்றின் வழியாக கடலில் சேர வேண்டிய நீரானது கடலில் சென்று சேராமல் டெல்டா பகுதியில் உள்ள நிலங்களில் உப்பு தன்மை அதிகரித்து நல்ல நீர் அனைத்தும் உப்பு நீராக மாறியுள்ளது.

அதே போல், 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மொத்த சென்னையே தண்ணீரில் மிதந்தது. அதற்கு காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் அதற்கு முக்கிய காரணம் நீர்நிலைகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டது; நீர் நிலைகள் தரிசான நிலையில் பாதுகாக்கப்படாமல் ஏரிகள் அனைத்தும் சரியான முறையில் தூர்வாரப்படாமல் இருந்ததால் சென்னை தண்ணீரில் மிதந்தது. ஆனால், அதற்கு அடுத்த ஆண்டே, அதாவது 2016 மற்றும் 2017ம் ஆண்டு சென்னை மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தது. இன்றும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. நாளையும் சந்திக்கும். ஏனென்றால் ஏரிகள், குளங்கள் சரியான முறையில் பராமரிக்காத வரை தண்ணீர் பஞ்சமானது குறையவே வய்ப்பில்லை.

இதே நிலை தொடர்ந்தால், தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரம் (உலகின் முதல் தண்ணீர் இல்லா நகரம்) பூஜ்ய நாள் (Zero day) அறிவித்தது போல நம் நாட்டிலும் அறிவிக்கின்ற நாள் வெகுதொலைவில் இல்லை. நீர்நிலைகள் மற்றும் நீர் ஆதாரங்களைக் காப்பாற்ற வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் போன்றவைகளை தூர்வாரி அதை பாதுகாத்தாலே போதும் தண்ணீர் பற்றாக்குறையானது முற்றிலும் குறையும்.

மீண்டும் ஒரு ஆரல் பேரழிவை இவ்வுலகம் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக இந்த மார்ச் 22ல் உலக தண்ணீர் தினத்தில் நீர் வளத்தைக் காப்போம் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும். இயற்கையின் பாதையை மனிதன் மாற்ற நினைத்தால், இயற்கைக்கு பேரழிவு இல்லை. மனிதனுக்குதான் மிகப் பெரிய பேரழிவு. இந்த பேரழிவில் இருந்து காத்துக்கொள்ள குவலயமே விழித்துக்கொள்.

source https://tamil.indianexpress.com/opinion/world-water-day-a-tale-of-the-aral-sea-disaster-an-alarm-to-the-world-284925/