வெள்ளி, 19 மார்ச், 2021

வீணாகும் கோவிட் -19 தடுப்பூசி… காரணம் இதுதான்! மத்திய அரசு புள்ளிவிவரம்

 நாடு முழுவதிலும் நடைபெற்று வரும் தடுப்பூசி விநியோகத்தை கவனித்து வரும் அரசு அதிகாரிகள், பலருக்கு அளிக்கப்பட வேண்டிய தடுப்பூசி குப்பியில் இருந்து தேவையான மருந்தினை எடுக்க போதுமான பயிற்சி பெற்ற பணியாளர்கள் இல்லை என்பதை கண்டறிந்து உள்ளனர். தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களில் விரிவான திட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் பல்வேறு மாநிலங்களில் ஏற்படும் தடுப்பூசி வீணடிப்பு தேசிய சராசரியை விட அதிகரித்துள்ளதாக அரசு கண்டறிந்துள்ளது.

உத்தியோகப்பூர்வ தகவல்களின் படி நான்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தேசிய சராசரியான 6.5%-ற்கும் அதிகமாக தடுப்பூசியை வீணடித்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. தெலுங்கானா (17.6 சதவீதம்), ஆந்திரா (11.6 சதவீதம்), உத்தரபிரதேசம் (9.4 சதவீதம்), கர்நாடகா (6.9 சதவீதம்), ஜம்மு காஷ்மீர் (6.6 சதவீதம்).

ஒரு தடுப்பூசி குப்பியில் 10 நபர்களுக்கான தடுப்பூசி இருந்தால் அதில் 6 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி குப்பி திறக்கப்பட்ட பின்னர், மக்கள் வராமல் போவதால் மட்டுமே இந்த வீணடிப்பு நிகழ்கிறது என்பது மட்டுமே காரணம் இல்லை. தேவையான மக்கள் இருக்கின்ற போதிலும் முறையான பயிற்சி பெறாத தடுப்பூசி வழங்குநர்கள் இருக்கின்ற போது 10 பேருக்கு போட வேண்டிய தடுப்பூசியை 9 நபர்களுக்கே வழங்குகின்றனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில இடங்களில் பயிற்சி பெற்ற முறையான தடுப்பூசி வழங்குநர்கள் ஒரு வயலில் (Vial) இருந்து 10 பேருக்கு பதிலாக 11 நபர்களுக்கு தடுப்பூசி வழங்குகிறார்கள். அவர்களிடம் கேட்டால் நிச்சயமாக 11 பேருக்கு அதில் தடுப்பூசி வழங்கலாம் என்று கூறுவார்கள். தடுப்பூசிகள் வீணாவதை தடுக்க இது மிக முக்கிய ஒன்றாகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இரண்டாவது காரணம், தடுப்பூசி தளங்களில் திட்டமிடல் இல்லாதது என்று கூறுகின்றனர். செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு தடுப்பூசி அமர்வும் அதிகபட்சமாக 100 நபர்களுக்கு தேவையான மருந்தினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தொலைதூர மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், குறைந்த எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு மாநிலங்கள் அமர்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும், அதே நேரத்தில் தடுப்பூசி வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். “ஒரு அமர்வில் பயனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அது மற்ற அமர்வுகளுடன் இணைக்கப்பட வேண்டும்” என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

மக்களை அணி திரட்ட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். 10 பயனாளிகள் இருக்கும் போது வயலை திறக்க வேண்டும் என்று நாங்கள் மாநில அரசுகளிடம் கூறுகின்றோம். மக்களிடம் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் காத்திருக்க கூறுங்கள் என்று கூறூகின்றோம். யாரும் வரவில்லை என்றால், தடுப்பூசி தேவைப்படும் மக்களை அடுத்த நாள் வர வைக்குமாறு நாங்கள் கூறுகின்றோம். இவை அனைத்தும் தடுப்பூசி மைய மட்டத்தில் சிறிய திட்டமிடலின் கீழ் தான் வருகிறது.

உ.பி., தெலுங்கானா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இந்த திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. ஆலோசனையின் போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வரும் நபர்களை திருப்பி அனுப்ப இயலாது. அது தடுப்பூசி தயக்கத்திற்கு வழி வகுக்கும். ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி வீணாவதை குறைப்பதை உறுதி செய்வதோடு தடுப்பூசி வழங்குநர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவோம் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் ஜனவரி மாதத்தில் இந்தியா தடுப்பூசி போடத் தொடங்கியபோது, முதல் இரண்டு வாரங்களில் நமது தேசிய சராசரி தடுப்பூசி வீணானது 18-19 சதவீதமாக இருந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற பகுதிகளில் தேசிய சராசரிக்கு குறைவான அளவில் தடுப்பூசி விரையம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் (5.6%), அசாம் (5.5%), குஜராத் (5.3%), மேற்கு வங்கம் (4.8%), பீகார் (4%), தமிழ்நாடு (3.7%).

புதன் கிழமை அன்று நரேந்திர மோடி, ஏன் தடுப்பூசிகள் வீணடிக்கப்படுகின்றன என்பதற்கான காரணங்களை அறிந்து, ஒவ்வொரு நாள் மாலையிலும் எவ்வளவு தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளன என்பதை அறியும் பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றார். தடுப்பூசி டோஸ் ஒன்றை வீணடிப்பது, தேவையான நபருக்கான தடுப்பூசி பெறும் உரிமை மறுக்கப்படுவது போன்றதாகும். மாநில அரசுகள் இதனை உடனே சரி செய்து, உள்ளூர் மட்டத்தில் தடுப்பூசி வீணடிப்புகளை குறைக்க திட்டமிடல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி வீணடிப்பு ஜீரோவில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/centre-tracks-covid-19-vaccine-wastage-lack-of-trained-personnel-planning-at-site-level-284321/