திங்கள், 22 மார்ச், 2021

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : நோயாளிகளால் நிரம்பும் மருத்துவமனைகள்

 சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் கடந்த ஆண்டு பிப்ரவரிமாதம் முதல் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் கொரோனா தொற்று பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதில் ஊரடங்கு காலமான கடந்த ஆண்டு ஜூலை மாதம்,  27-ந்தேதி அதிகபட்சமாக 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. ஆனாலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பலகட்ட தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நிலுவையில் உள்ளது.

தமிழகத்திலும் இந்த உத்தரவு நிலுவையில் உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் நேற்று 2-வது நாளாக தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 1000-ஐ தொட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சென்னையில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்,  தற்போது இந்த எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் படுக்கைகள’ வசதி அதிகப்படுத்தப்பட்டு வருகிறர்.

இதில் கொரோனா பிரத்யேக மருத்துவமனைகளான சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள 350 படுக்கைகளில், தற்போது 306 கொரோனா நோயாளிகளும், கிண்டி கிங்ஸ் அரசு கொரோனா மருத்துவமனையில் 500 படுக்கைகளில் 490 கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வார்டில் அதிக நோயாளிகள் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றால்,  273 நோயாளிகளும், ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 90 நோயாளிகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 50 நோயாளிகளும்  சிகிச்சை பெற்று வந்தனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று அதிகரிப்பால் மருத்துவமனையில் படுக்கை வசதி அதிகரிக்கும் நடவடிக்கைளில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது அத்திப்பட்டு பகுதியில் 4 ஆயிரத்து 800 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தில் உள்ள அண்ணாநகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 100 படுக்கைகளும், கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 100 படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-corana-update-again-corana-increase-in-chennai-284819/