சென்னை- ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்துக்கு இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டால் ஜம்மு- காஷ்மீர்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுற்றுலாத் துறை கூடுதல் செயலாளர் வாசிம் ராஜா தெரிவித்தார்.
சென்னையில் , Travel Agents Society of Kashmir (TASK) என்ற அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், ” வடக்கு எல்லையில் உள்ள ஜம்மு காஷ்மீர், தெற்கு கடைக்கோடியில் உள்ள தமிழகத்துடன் நன்கு இணைக்கப்பட வேண்டும். தற்போது, ஸ்ரீநகர் பகுதிக்கு சென்னையில் இருந்து தினமும் 40க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன . ஆனால்,நேரடி விமான சேவை தொடங்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.
ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்று வரும் சமீப கால முன்னேற்றங்கள் குறித்து பேசிய அவர், ” முன்பெல்லாம், பள்ளத்தாக்கு பகுதிக்கு மட்டுமே தமிழகத்தில் இருந்து சிறிய எண்ணிக்கையிலான பயணிகள் வருகை புரிந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீர் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உயர்ந்து வருகிறது. மன்சார் ஏரி மற்றும் தேவிகா ஆறு வளர்ச்சி திட்டங்கள் ரூ.200 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்தியபின், மன்சார் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 20 லட்சமாக அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.
ஆண்டுதோறும் இந்திரா காந்தி நினைவு துலிப் தோட்டத்தில் நடைபெறும் காஷ்மீர் துலிப் திருவிழாவில் தமிழகர்கள் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். இது ஆசியாவின் மிகப்பெரிய துலிப் தோட்டமாக இது விளங்குகிறது.
பூத்து குலுங்கி கண்களுக்கு விருந்து படைக்கும் துலிப் மலர்கள் – நம்ம காஷ்மீர்ல தான்
முன்னதாக, நாட்டை கலாச்சார ரீதியில் ஒருங்கிணைக்கும் ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தில்
ஜம்மு காஷ்மீர், லடாக்குடன் தமிழகத்தை மத்திய அரசு சேர்த்தது. ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கத்தின்படி, ஒரு ஆண்டுக்கு ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசமும், மற்றொரு மாநிலம் /யூனியன் பிரதேசத்துடன் கலாச்சார ரீதியில் இணைக்கப்படும். அந்த மாநிலங்கள், தங்கள் மொழி, இலக்கியம், உணவு, திருவிழாக்கள், கலாச்சார விழாக்கள், சுற்றுலா போன்றவற்றில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவற்றை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
source : https://tamil.indianexpress.com/tamilnadu/need-chennai-jammu-kashmir-direct-flights-to-boost-jk-tourism-283283/