தமிழகத்தில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள இரண்டு அறிவிப்பால் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் பள்ளி மற்றும் கல்லூரிகள் தடை செய்யப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து அரையான்டு தேர்தவும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பெற்றோர்கள் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த வகுப்புகள் அனைத்தும் கொரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் திறக்கப்படாததால், 9,10,11 மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மற்ற 3 வகுப்பு மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு மதிப்பெண் எப்படி வழங்கப்படும் என்று பெற்றோர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் 10-ம் வகுப்பு மாணவர்கள் 11-ம் வகுப்பு சேரும்போது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியானது ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தஞ்சை முதன்மை கல்வி அலுவலர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9 முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அவர்களின் இறுதியாண்டு தேர்வு மதிப்பெண்ணாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தேர்வுகள் அனைத்தும் மார்ச் மாத இறுதிக்குள் நடைபெற வேண்டும் என்றும், பள்ளிகளில் நடத்திய பாட பகுதிகளில் இருந்து வினாத்தாள் தயார் செய்துகொள்ள வேண்டும் என்றும், அரசு வகுத்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி இந்த தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
பிற்பகல் 3 மணிக்கு வெளியான இந்த அறிவிப்பின் மீது விசாரணை நடத்திய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், 3 வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தஞ்சை முதன்மை கல்வி அலுவலரின் இந்த அறிவிப்பு ஏற்புடையதல்ல. ஆகவே இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வித தேர்தவும் நடத்தப்படாது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசு 3 வகுப்பு மாணவர்கள் அனைவரும் கட்டாய தேர்ச்சி என அறிவித்துள்ள நிலையில், இன்று அறிவிக்கப்பட்ட இரண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பெற்றோர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-school-education-9th-10th-11th-exam-announcement-283995/