திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி இருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இருவரும் பெயர் குறிப்பிடாமல் ட்விட்டரில் கண்டித்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரக் களம் ஆளும் கட்சி எதிர்கட்சி தலைவர்களின் அதிரடியான விமர்சங்களால் அரசியல் களம் சொற்போர் களம் போல காட்சி அளித்து வருகிறது. அந்த வகையில், திமுகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஆ.ராசா எம்.பி, தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கள்ள உறவில் குழந்தை என்று அவதூறாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, “பத்திரிக்கைகள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமியை மிகப்பெரிய தலைவரைப் போல சித்தரிக்கிறார்கள் . பொதுவாழ்வில் அவர் எட்டியிருக்கும் உயரம் ஒன்றும் இல்லை. நல்ல உறவில் நல்ல முறையில் பிறந்த ஆரோக்யமான குழந்தைதான் ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைதான் எடப்பாடி பழனிச்சாமி. ” என்று கடுமையாக பேசினார். ஆ.ராசா பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியதை அடுத்து அவருடைய பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். திமுக ஆதரவாளர்களும்கூட ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக கொள்கை பரப்பு செயலாளரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி குனியமுத்தூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நாட்டு மாட்டின் நன்மைகளை விளக்கி பேசிய போது அதற்கு உதாரணமாக பெண்களின் உடலமைப்பு குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கோவை கோபாலபுரத்தில் பெண் மகளிர் நல அமைப்பு நடத்தி வரும் வக்கீல் சுபாஷினி என்பவர் லியோனி மீது கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மேலும், லியோனியின் பேச்சுக்கு பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பொது வெளியில் பெண்கள் பற்றி இவ்வளவு அசிங்கமாகவும், கேவலமாகவும் பேசுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்.” என்று பெயர் குறிப்பிடாமல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதே போல, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “தடைகளைத் தாண்டி தீவிர அரசியலில் ஈடுபடும் பெண்களை இழிவுபடுத்துவதும், ஆண்கள் எதிரெதிராக களம்காணும்போது கூட அவர்கள் வீட்டுப் பெண்களை இழிவுபடுத்துவதும் தொடர்ந்து நடக்கிறது. கண்ணியமான,நேர்மையான அரசியல் என்பது பெண்களை மதிப்பதில் இருந்தே துவங்கமுடியும். அதுதான் உண்மையான பெரியாரின் மண்.” என்று பெயர் குறிப்பிடாமல் கண்டித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-mp-a-raja-controversy-speech-on-cm-edappadi-k-palaniswami-mps-kanimozhi-jothimani-condemned-286088/