செவ்வாய், 30 மார்ச், 2021

சென்னையை தனி யூனியன் பிரதேசம் ஆக்கும் திட்டத்தில் பாஜக: திருமாவளவன் திடுக்

 சேலத்தில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் பங்கேற்ற பிரசார பொதுக் கூட்டத்தில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


சேலத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, கூட்டணி சார்பில் மாபெரும் பொதுகூட்டம் நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சித் தலைவரகளான ஸ்டாலின், ராகுல் காந்தி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர். அப்போது பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்தேசத்தின் பாரம்பர்யத்தை கருத்தில் கொண்டு, ஜனநாயகத்தையும், தமிழக மக்களையும், நாட்டில் சமூக நீதியை பாதுகாக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அமைந்தது தான் திமுக தலைமையிலான கூட்டணி.

தமிழகத்தின் பெரும் அரசியல் தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத சூழலை பயன்படுத்தி தமிழக பாஜக காலூன்ற பல முயற்சிகளை செய்து வருகிறது. பல மாநிலங்களில் மதவெறியை தூண்டி, மக்களை பிளவுப்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள பாஜக, தமிழகத்தில் காலூன்றுவதை அதன் முதன்மை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், பாஜக கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு படி கூட முன்னேறாமல் தமிழகத்தில் மட்டுமே தோற்று நிற்கிறது.

பாரதிய ஜனதா, அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முதுகில் ஏறிக் கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வலிமை பெற்றுவிடலாம் என நினைக்கிறது. ஆனால், அதிமுக என்பது நீர்த்துப் போய்விட்ட கட்சி; பாமக விலைபோய் விட்ட கட்சி. இந்த கூட்டணியால் எங்களை வீழ்த்த இயலாது. எதிர்வரும் தேர்தல், பாஜக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு எதிரான யுத்தமாகவே பார்க்கப்படுகிறது.

பாஜக எனும் சனாதான சக்தி, தமிழ் மொழி, தமிழினம், சமூகநீதி, ஜனநாயகம் என அனைத்துக்குமான ஆபத்தாக சூழ்ந்துள்ளது. தமிழ்நாடு என்னும் பெயரையே மாற்றி, தட்சிண பிரதேஷ் எனும் பெயரை சூட்டுவதாக பாஜக அறிவித்திருக்கிறது. மேலும், சென்னையை தனி யூனியன் பிரதேசமாக மாற்றி, அவர்களின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார்கள். தமிழ்நாடு என்ற பெயரை சூட்டுவதற்கு சங்கரலிங்கணார், அண்ணா ஆகியோரின் முயற்சிகள் என்னாவது? இன வரலாறு, மொழி வரலாறு ஆகியவற்றை கொண்ட தமிழினத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது, என்றார்.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-plans-to-create-chennai-as-union-terittory-286769/