திங்கள், 15 மார்ச், 2021

தஞ்சாவூரில் பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கொரோனா தொற்று; மருத்துவமனையில் சிகிச்சை

 பள்ளியில் 56 மாணவிகளுக்கும் 1 ஆசிரியருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்ட அனைவருக்கும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், தற்போது 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 1100 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மார்ச் 8ம் தேதி ஒரு மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அந்த மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில், அந்த மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.


இதையடுத்து, பள்ளியில் படிக்கும் 460 மாணவிகளுக்கு கடந்த 11ம் தேதி சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் நேற்று 20 மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கால்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, அந்த பள்ளியில் மார்ச் 12ம் தேதி 619 மாணவிகளுக்கும் 35 ஆசிரியர்களுக்கும் கொரோ வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் மேலும் 36 மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பள்ளியில் 56 மாணவிகளும் 1 ஆசிரியரும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 56 மாணவிகள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அந்த பள்ளி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டு பள்ளிக்கு 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அம்மாப்பேட்டையில் உள்ள அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பள்ளி ஆசிரியர்களிடம் கொரோனா தொற்று பரவல் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், மாணவிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

தஞ்சாவூரில் ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருப்பது மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/thanjavur-56-school-girls-tested-covid-19-positive-283338/