மேற்கு வங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் அம்மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை முதல் அமைச்சரவைக் கூட்டத்தின்போதே நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சோனார் பங்களா சங்கல்ப பத்திரா (Sonar Bangla Sankalpa Patra) என்று அழைக்கப்பட்ட அந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே சிஏஏவை செயல்படுத்துவோம் என்று அவர் கூறினார். மேலும் ஆயுஷ்மான் பாரத், பிஎம் கிஷான் போன்ற திட்டங்களையும் ஏழை மக்களுக்காக செயல்படுத்துவோம் என்று குறிப்பிட்டார்.
மோடி அரசால் டிசம்பர் மாதம் 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் விதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் நடைமுறைக்கு வர உள்ளது மேற்குவங்கத்தில் பல தரப்பினர் இதனை ஆதரித்தாலும் அசாமில் பகுதிகளில் மக்கள் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பாஜக மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது.
சட்டத்திற்கு புறம்பாக குடியேறும் மக்களுக்கு எதிராக பாஜக மிகவும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று குறிப்பிட்ட அவர் மேற்கு வங்கத்தை ஊடுருவல் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு அகதிகள் குடும்பத்தினருக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு, ரூ.10 ஆயிரம் வீதம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்றார்.
மஹிஸ்யா, திலி மற்றும் இதர இந்து பிரிவினருஇக்கு ஓ.பி.சி. இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறிய அவர் மத்துவாக்கள் மற்றும் தல்பதிகளுக்கு ரூ. 3000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்று கூறினார். 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் வங்கமொழி கட்டாயம் என்றும் அந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெண் வாக்களர்களை கருத்தில் கொண்டு, பெண்களுக்கு கே.ஜி. முதல் பி.ஜி. வரையிலான இலவசக் கல்வி, இலவச போக்குவரத்து வசதிகள், மற்றும் அரசு வேலை வாய்ப்பில் 33% இட ஒதுக்கீடு போன்றவை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ரூ. 11 ஆயிரம் கோடி அளவில் சோனார் பங்களா நிதி மூலம் கலை மற்றும் இலக்கியத்தை மேம்படுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்கு இணையாக தாகூர் பரிசு வழங்கப்படும். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்-களுக்கு இணையாக பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவும் வகையில் ரூ .20,000 கோடி ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் நிதி, மற்றும் ஒரு நகரத்திற்கான கொல்கத்தா நிதி போன்ற திட்டங்களும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.
பங்குராவில் நடைபெற்ற பிரச்சாரத்தில் ஈடுபட்ட நரேந்திர மோடி பாஜக அரசு மத்திய மற்றும் மாநில அளவில் வளர்ச்சியை உறுதி செய்யும் என்று கூறினார். ”மமதா பானர்ஜி என்னுடைய தலையை கால்பந்தாக நினைத்து விளையாடும் சுவரோவியம் குறித்து நான் கேள்விப்பட்டேன். இது வங்கத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானது. திதி நீங்கள் என்னை உதைக்க முடியும், கால்பந்து விளையாட முடியும் ஆனால் மேற்கு வங்கத்தின் வளர்ச்சியையும் மேற்கு வங்கத்தினரின் கனவையும் கலைக்க விடமாட்டேன்” என்றார்.
கிழக்கு மித்னாப்பூரில் உள்ள ஈக்ராவில் அமித் ஷா முன்னிலையில், மூன்று முறை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த சிசிர் அதிகாரி பாஜகவில் இணைந்தார். மமதாவின் நெருங்கிய வட்டத்தில் இருந்து பாஜகவிற்கு மாறிய சுவேந்து அதிகாரியின் அப்பா இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியது பாஜக. மமதாவின் உண்மையான நிறம் தெரிந்திருந்தால் மக்கள் அவருக்கு வாக்கே அளித்திருக்க மாட்டார்கள் என்று கூறிய மோடி, தோல்வி உறுதி என்று தெரிந்தவுடன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வாக்கு இயந்திரங்கள் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள் என்றார்.
சல்தோராவில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சந்தனா பௌரியை குறிப்பிட்டு பேசிய அவர், சந்தனா மேற்கு வங்க மக்களின் ஒரு பிரதிநிதி ஆவார். மேற்கு வங்கத்தின் முன்னேற்றம் குறித்த கேள்விக்கு அவர் ஒரு பதில். நீங்கள் அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டார். எங்கே திட்டம் இருக்கிறதோ அங்கே ஊழலும் இருக்கிறது என்று மேற்கோள்காட்டிய மோடி, க்ரிஷாக்நிதி யோஜனா திட்டத்தை செயல்படுத்தாமல் தோல்வி அடைந்துவிட்டது மமதா அரசு என்றும் அவர் குறிப்பிட்டார்.
”விளையாட்டு ஆரம்பமாகட்டும் என்று நீங்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் ஆனால் மக்களோ உங்கள் ஆட்டம் முடிந்துவிட்டது என்று கூறுகிறார்கள்” என்றார் மோடி. மே 2ம் தேதி அன்று இந்த விளையாட்டு முடிந்து, மமதா வெளியேற்றப்படுவார் என்றார் மோடி.
அமித் ஷா தன்னுடைய உரையில், மேற்கு வங்க மக்கள் தான் சோனார் பங்களா வேண்டுமா அல்லது பைபோ (மமதாவின் சகோதரன் மகன்) முதல்வராக வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். துர்காவின் சிலையை கரைத்தல் அல்லது சரஸ்வதி பூஜை என்று எந்தவிதமான மத சடங்குகளை பின்பற்றவும் தடை இருக்காது.
ஷாவுடன் மேடையில் இருந்த சிசிர் அதிகாரி, அட்டூழியங்களில் இருந்து மேற்கு வங்கத்தை காப்பாற்றுங்கள்; நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம். எங்களின் குடும்பம் உங்களுடன் இருக்கிறது. ஜெய் சிய ராம், ஜெய் பாரத்” என்றார். சுவேந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் மமதாவை பெரிய அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வார் என்று அவர் கூறினார்.
சுவேந்து அதிகாரியின் சகோதரர் சௌமெந்துவும் பாஜகவில் இணைந்தார். தம்லுக் தொகுதியின் திரிணாமுல் எம்.பி. திப்யேந்துவும் விரைவில் இந்த கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/india/caa-in-first-bengal-cabinet-meeting-bjp-in-manifesto-284933/