செவ்வாய், 9 மார்ச், 2021

சட்டம் : FIR பதிவு செய்வதற்கான அலுவலர்

 

காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர் (officer - in - charge of the police station) காவலர் என்ற பதவி நிலைக்கு மேலான அலுவலர், குவிமுச சட்டப் பிரிவு 154(1) ன்படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அதிகாரம் படைத்தவராவார். இரண்டாம் நிலை காவலர்களுக்கு பிடியாணை வேண்டாக் குற்றங்கள் (cognizable offence) பதிவு செய்யும் அதிகாரம் தமிழ்நாட்டில் கிடையாது. புறங்காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் தலைமைக் காவலருக்கு, குவிமுச சட்டப் பிரிவு 174 ன் கீழ் வழக்கை பதிவு செய்யவும், அதன் புலன்விசாரணையை தமிழ்நாடு காவல் நிலை ஆணை எண் 585 ன்படியும், சென்னை குற்றவியல் நடைமுறை விதிகளின் பிரிவு 21(40) ன்படியும் நடத்திட அதிகாரம் உண்டு.
1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 36 ன் கீழ், எந்தவொரு உயர் அலுவலரும் வழக்கை பதிவு செய்து புலன்விசாரணை செய்யும் அதிகாரம் பெற்றவராவார். தமிழ்நாடு காவல் சட்டம் பிரிவு 35 மூத்த காவல் அலுவலர், சார்நிலை காவல் அலுவலரின் அதிகாரங்களை கையாள அவர்களுக்கு அதிகாரம் வழங்குகிறது.
FIR பதிவு செய்வதற்கான அலுவலர், காவல் நிலைய பொறுப்பு அலுவலராக இருத்தல் வேண்டும். அந்த காவல் நிலையத்தில் பணிபுரியாத, வேறு பிற காவல் அலுவலர்களுக்கு FIR பதிவு செய்ய அதிகாரம் கிடையாது.
எடுத்துக்காட்டாக தனிப்பிரிவு, குற்ற புலனாய்வுத்துறை, நுண்ணறிவு பிரிவு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கண்காணிப்பு பிரிவு, ஆவின், முனிசிபல் கார்ப்பரேஷன், போக்குவரத்து கழகங்கள், காவலர் பயிற்சி பள்ளி, ஆயுதப்படை பிரிவுகள், கணிணிப்பிரிவு, குற்ற ஆவணக்கூடம் ஆகியவற்றில் பணிபுரியும் காவல் அலுவலர்களுக்கு, அவர்களது அந்தந்த பிரிவுகள் காவல் நிலையங்களாக அறிவிக்கப்படாததால் அவர்களுக்கு Fir பதிவு செய்ய அதிகாரம் கிடையாது.
குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுகள் காவல் நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த பிரிவுகளில் பணியாற்றும் காவல் அதிகாரிகளுக்கு வழக்கை பதிவு செய்து புலன்விசாரணை செய்ய அதிகாரம் உண்டு.
credit : Dhanesh Balamurugan ( advc)