புதன், 31 மார்ச், 2021

சிவப்பு நிற கடற்பாசிகள்; குமரி மாவட்டத்தில் 2 புதிய இனங்கள் கண்டுபிடிப்பு!

  ஜெல்லி மற்றும் ஐஸ்க்ரீம்கள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான இரண்டு சிவப்பு கடற்பாசிகள் இந்திய கடற்கரை பகுதிகளில் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. பதிண்டாவில் அமைந்திருக்கும் மத்திய பஞ்சாப் பல்கலைக்கழகத்தின், ஃபெலிக்ஸ் பாஸ்ட் தலைமையிலான கடல் தாவரவியலாளர்கள் தமிழகத்தின் கன்னியாகுமரி மற்றும் குஜராத், டாமன் டையூ பகுதிகளிலும் இந்த புதிய பாசி இனங்களை கண்டறிந்துள்ளனர்.

ஹிப்னியா இண்டிகா (Hypnea indica) மற்றும் ஹிப்னியா புல்லட்டா (Hypnea Bullata) என்ற இந்த இரண்டு வகை பாசிகளும் கன்னியாகுமரியில் கண்டறியப்பட்டுள்ளது. சிறந்த அதே நேரத்தில் அடர்த்தியான கிளைகளை கொண்ட ஹிப்னியா இண்டிகா குஜராத்தின் சிவ்ராஜ்பூர் மற்றும் சோம்நாத் பதானில் கண்டறியப்பட்டன. ஹிப்னியா புல்லட்டா கொத்துக் கொத்தாக டையூ டாமன் கடலில் வளர்கிறது.

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வழங்கிய சி.இ.ஆர்.பி. கோர் மானியத்தின் உதவியை கொண்டு இந்த ஆராய்ச்சி 2018ம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. இந்த வகையான பாசிகள் உயர்ந்த அலை ஏற்படும் போது மறைந்து, குறைந்த அலைகளின் போது வெளியே தெரியும் பாறை இடுக்குகளில் வளர்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த மாதிரிகளை சேகரிக்கும் போது ஏற்பட்ட சவால் என்பது எங்களின் பயணமும் குறைந்த உயரம் கொண்ட அலைகள் உருவாகும் காலமும் தான். சில நேரங்களில் 100 கி.மீ அப்பால் கடலையும் கடற்கரையும் கண்காணிப்பது ஒரு சவாலாகவே இருந்தது.

டி.என்.ஏ. பார் கோடிங் தொழில்நுட்பத்துடன் கூடிய உருவ அமைப்பை ஒப்பிட்டு இந்த இரண்டு இனங்களின் தனித்துவத்தை உறுதி செய்தோம் என்கிறார் புஷ்பெந்து குண்டு. இவர் மத்திய பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாம் ஆண்டு முனைவர் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆராய்ச்சியின் இணை ஆசிரியரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான பொட்டானிக்கா மரினா (Botanica Marina) என்ற இதழையும் வெளியிட்டார்.

இந்திய கடற்கரையில் சிவப்பு நிற பாசிகளை நாங்கள் கண்டறிந்தது இதுவே முதல்முறை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த இனங்களை அதிக அளவில் காணமுடியாது ஏன் என்றால் அவை கடல் நீர்பரப்பின் மத்தியில் அமைந்திருக்கும் திட்டுகளில் வளர்ந்து வருகின்றன. பாம்பன் பாலத்திற்கு அருகே அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பாசியின் பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றது. இவை குறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று பாஸ்ட் கூறினார். இவர் மத்திய பஞ்சாப் பல்கலைக்கழக தாவரவியல் பிரிவின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

வணிக ரீதியாக இவை நடப்பட்டு அறுவடை செய்யப்படுமானால் நல்ல சந்தை மதிப்பை பெற முடியும் என்கிறார் பாஸ்ட். ஹிப்னியாவில் உணவுத் தொழிலில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கராஜீனன் என்ற உயிர் மூலக்கூறு உள்ளது. ஆனால், இந்தியாவில் கடற்பாசி சாகுபடி பிரபலமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 7500 கி.மீ பரப்பில் கடற்கரைகள் உள்ளன. இந்த கடற்பாசிகளுக்கான சூழலியலை உருவாக்க பெரும் ஆற்றலும் தேவையும் உள்ளது. மீனவர்களும் விவசாயிகளும் இணைந்து கடற்பாசி உற்பத்தியில் பயிற்சி பெற வேண்டும். மேலும் இதனோடு தொடர்புடைய தொழிற்சாலைகளும் இதற்கு உதவி புரிய வேண்டும் என்று கூறும் அவர், மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் நடைபெறும் கடற்பாசி வணிகம் குறித்து மேற்கோள் காட்டினார்.

இந்தியா தன்னுடைய முதல் நீலப் பொருளாதாரம் தொடர்பான முதல் கொள்கை வரைவை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் கடற்பாசி சாகுபடி குறித்து பாஸ்ட் நம்பிக்கை கொண்டுள்ளார். பூவி அறிவியல் அமைச்சகம் தற்போது இந்தக் கொள்கையை உருவாக்கி வருகிறது.

source : https://tamil.indianexpress.com/tamilnadu/two-new-seaweed-species-discovered-from-kanyakumari-gujarat-287057/